திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை உயர்அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி.

காவல்
  •  
  •  
  •  
  •  

திருச்சி ,

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூர் மாவட்ட துப்பாக்கி சுடும் தளத்தில் நேற்று நடந்தது. தமிழக கமாண்டோ படையின் கூடுதல் டி.ஜி.பி. அமல்ராஜ் தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்தார். பிஸ்டல், இன்சாஸ் என்ற பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. போட்டியில் திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் முதலிடமும், தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் 2-ம் இடமும், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் 3-ம் இடமும் பிடித்தனர். இன்சாஸ் பிரிவு துப்பாக்கி சூடும் போட்டியில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் முதலிடமும், தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் 2-ம் இடமும், 3-ம் இடத்தை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரும், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபனும் பிடித்தனர்.

ஒட்டுமொத்த சாம்பியனில் பிரவேஷ்குமார் முதலிடமும், ஜவகர் 2-ம் இடமும், அருண் 3-ம் இடமும் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக கமாண்டோ படையின் கூடுதல் டி.ஜி.பி. அமல்ராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினார். பரிசளிப்பின்போது, திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராதிகா, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி ஆகியோர் உடனிருந்தனர்.