கஞ்சா வைத்திருப்பதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது கையில் முறிவு ஏற்பட்டு கட்டுபோட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பெண் காவலர்களை தவறாக விமர்சித்த வழக்கில் சவுக்கு சங்கர் கடந்த சனிக்கிழமை தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது காரில் சோதனை செய்த போது 400 கிராம் கஞ்சா இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்தநிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கரை போலீசார் தாக்கியதாகவும், உடல் முழுவதும் காயம் ஏற்பட்டதாக அவரது வழக்கறிஞர் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்போடு வந்த அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டு கட்டுப்போடபட்டிருந்தது தெரியவந்தது. மேலும் சரியான முறையில் நடக்க முடியாமல் சிரமப்படுவது போல் தாங்கி நடந்தார். சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றி வளைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் அமைப்பு நீதிமன்றத்திற்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘‘அவர் (சவுக்கு சங்கர்) தெளிவாக காயமடைந்துள்ளார். இரண்டு போலீஸ்காரர்கள் அவர் நடக்கும்போது கிட்டத்தட்ட அவரைப் பிடித்திருக்கிறார்கள் மற்றும் அவரது கை ஒரு வார்ப்பில் உள்ளது. தமிழக காவல்துறையும், அரசும் நிறைய பதில் சொல்ல வேண்டும். நீதிமன்றம் தலையிடும் என நம்புகிறோம். இது தவறு. #சவுக்கு சங்கர்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.