சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப்ராய் ரத்தோர் டெல்லியில் 1968ம் ஆண்டு பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை குவைத் நாட்டில் முடித்துள்ள சந்தீப்ராய் ரத்தோர் பேரிடர் மேலாண்மையில் ஆய்வுப்பட்டம் பெற்றுள்ளார். 1992ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான சந்தீப்ராய் தமிழக கேடராக பரமக்குடியில் ஏ.எஸ்.பி.யாக தனது பணியை தொடங்கினார். பின்னர், நாகர்கோவில் மாவட்டத்திலும் பணியாற்றினார். பின்னர், 1996ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் துணை ஆணையராக நியமிக்கப்பட்ட சந்தீப்ராய் 2000ம் ஆண்டு சென்னை போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். இவர் போக்குவரத்து துணை ஆணையராக இருந்தபோது போக்குவரத்து எல்.இ.டி. சிக்னலை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். பின்னர், சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். அப்போது முத்திரைத்தாள் மோசடி வழக்கு விசாரணை இவர் தலைமையில்தான் நடந்தது. பின்னர், தூத்துக்குடி எஸ்.பி.யாக பொறுப்பு வகித்தார். பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த சந்தீப்ராய் ரத்தோர் தேசிய பேரிடர் மீட்பு படை தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது, இவரது தலைமையிலான அணிதான் கேதர்நாத் வெள்ளம், சென்னை முகலிவாக்கம் கட்டிட விபத்து போன்றவற்றை கையாண்டது.

பின்னர், 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை தலைவராக பொறுப்பு வகித்தவர், பின்னர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டார். சென்னையில் இருந்து புதியதாக பிரிக்கப்பட்டு உருவான ஆவடி மாநகர காவல் ஆணையத்தின் முதல் காவல் ஆணையராக ஏ.டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். பின்னர், டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று காவலர் பயிற்சி பள்ளி டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

தற்போது, சென்னையின் 109வது காவல் ஆணையராக சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காவல்துறையின் அதிகாரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காவல் ஆணையருக்கான போட்டியில் டேவிட்சன் ஆசிர்வாதம் மற்றும் ஆபாஷ்குமார் இருந்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணை காரணமாக டேவிட்சன் ஆசிர்வாதம் காவல் ஆணையராகும் வாய்ப்பு பறிபோனது. சந்தீப்ராயே காவல் ஆணையராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரே காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் பதவியும் ஏற்றுக்கொண்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal