‘இருவிரல்’ பரிசோதனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்ததாக கூறப்படும் நிலையில், சமீபத்தில் அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. இதுதொடர்பான புகாரின் பேரில் சிறுவன், சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தி திருமணம் நடந்த வீடியோ ஆதாரத்தையும் சேகரித்தனர்.

ஏற்கனவே சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் மீது அடுக்கடுக்காக புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் குழந்தை திருமண சர்ச்சை புதிய பரபரப்பிற்கு வித்திட்டது. இந்த விவகாரம் குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்து பேட்டி கவனம் பெற்றது. தீட்சிதர்கள் தங்களது 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை. பொய்யான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் மிரட்டல் காரணமாக தீட்சிதர்கள் ஒப்புக் கொண்டனர்.

இந்த விவகாரத்தால் தீட்சிதர்களின் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை அழைத்து சென்று இருவிரல் பரிசோதனை செய்திருப்பதாக கூறி பகீர் கிளப்பினார். இதனால் அவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கின்றனர். சிலர் தற்கொலைக்கும் முயன்றனர். இதுபற்றி நான் முதலமைச்சருக்கும் கடிதம் எழுதியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். இது பெரும் விவாதப் பொருளாக மாறியது.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இருவிரல் பரிசோதனை முறை 2013ல் இருந்து தடை செய்யப்பட்ட ஒன்று. அந்த பரிசோதனை செய்யப்படவில்லை. ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய தகவல் முற்றிலும் பொய்யானது என்று விளக்கம் அளித்தார். குழந்தை திருமணத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறுமிகளுக்கு தேவையான மருத்துவ உதவியும், பரிசோதனையும் செய்யப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையில் சிதம்பரத்தில் சிறுமிக்கு தாலி கட்டியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் போலீசார் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், சிறுவர், சிறுமியர் மீது எந்த தவறும் இல்லை எனக் குறிப்பிட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. மேலும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ்க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் தர்மபுரியில் இள வயது திருமண வழக்கில் சிறுவர், சிறுமி இருவரையும் போலீசார் நடத்திய விதத்திற்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. 18 வயதுக்கு உட்பட்ட நபர்களாக இருந்தால் குழந்தைகளாக கருதி சிறார் நீதிமன்றங்கள் மூலமாக தான் கையாள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal