நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்ம மரணத்தில் அவருக்கு கடைசியாக வந்த அழைப்புகள் பற்றி போலீசார் விசாரணையில் இறங்கியிருக்கின்றனர். குற்றவாளிகளை போலீசார் நெருங்கி விட்டதாக காவல்துறை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகிறது.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், கடந்த 4ஆம் தேதி அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தார்.
மரண வாக்குமூலம் எனக் குறிப்பிட்டு, அவர் திருநெல்வேலி எஸ்.பிக்கு எழுதிய கடிதம் மற்றும் பண விவகாரம் தொடர்பாக மருமகனுக்கு எழுதிய கடிதம் ஆகியவை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மே 2ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து சென்ற ஜெயக்குமார் தனசிங், 4ஆம் தேதி அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அதற்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் எங்கு சென்றார், யாரை சந்தித்தார் என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்காக திசையன்விளை சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஜெயக்குமார் இல்லம் அமைந்திருக்கும் கரைசுத்துப்புதூர் பகுதியில் 10 கி.மீ. தூரத்திற்கு சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2ஆம் தேதி இரவு 10.20 மணியளவில் ஜெயக்குமார், திசையன்விளை பஜாரில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கும் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர். அன்று இரவு 10.30 மணிக்கு பிறகு அவரது செல்போனுக்கு 2 வெவ்வேறு எண்களில் இருந்து போன் வந்துள்ளது. அந்த அழைப்புகளை ஏற்று ஜெயக்குமார் பேசியுள்ளார். அந்த எண்களை போலீசார் தொடர்பு கொண்டபோது அவை சுவிட்ச் ஆப் ஆகியிருந்துள்ளது.
மேலும், மாயமான அன்று ஜெயக்குமார் எடுத்துச் சென்ற 2 செல்போன்களும் இதுவரை போலீசாரின் கைக்கு கிடைக்கவில்லை. ஜெயக்குமார் மாயமாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளையும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் போலீசார் ஆய்வு செய்து அவர்கள் யார்? எங்கிருந்து போன் செய்தார்கள்? எதற்காக ஜெயக்குமாரை தொடர்பு கொண்டார்கள்? என்பது குறித்த விசாரணையில் தனிப்படை போலீசார் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.