தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்தவொரு அவப்பெயரும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அதோ, தி.மு.க.வினரே வியக்கும் விதமாக மிகச் சிறப்பாக தமிழகத்தை வழிநடத்திச் செல்கிறார்.

இந்த நிலையில்தான் நாளை நடைபெறவுள்ள நகர்ப்புற தேர்தலில், எந்தவொரு அசம்பாவிதங்களும் நடந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறாராம். அதாவது, தி.மு.க. ஆட்சியின் போது, நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் வன்முறை வெடித்ததாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்தமுறை அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என முதல்வர், காவல்துறையினருக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், சிவி சண்முகம், பெஞ்சமின் ஆகியோர் கடந்த 12-ம் தேதி கவர்னர் மாளிகையில் இதற்காகவே ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அப்போது பேசிய மாஜிக்கள், ‘‘மின்னணு வாக்குப்பதிவு முறையில் தேர்தல் நடத்துவதால், சீல் உடைக்கும்போது காணொலியில் பதிவு செய்ய வேண்டும் என்கிற விதி உள்ளது. ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 22 அதிமுக வேட்பாளர்களின் மனுக்களை திரும்பப் பெற வைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

ஒருபக்கம் தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் உள்ளது, மறுபக்கம் காவல் துறையினர் அதிமுகவினரை மிரட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். கோயம்புத்தூர், சேலம், ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் குற்றவாளிகள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அதிமுகவினரை மிரட்டுகிறார்கள். கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. திமுகவிற்கு தேர்தல் ஏஜென்டாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது” என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டது

அதேபோல இந்த முறை தனித்து களமிறங்கும் பாஜக தரப்பிலும் இதே குற்றச்சாட்டு திமுக அரசு மீது உள்ளது. இந்த முறை, நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டால், பாஜக நகர்ப்புறங்களில் பிரதான இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது. இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தும், தேர்தல் ஆணையம் திமுக ஆணையமாக செயல்படுகிறது, முறைகேடுகளை படம் பிடித்து கொண்டு ஆதாரமாக காட்டினால்கூட நடவடிக்கை எடுப்பதில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆக மொத்தம் தமிழகம் முழுவதும் திமுகவினர் அராஜகம் செய்து வருவதாகவும், திமுகவினரின் இந்த செயலுக்கு தேர்தல் ஆணையம், அதிகாரிகள் துணை போகிறார்கள் என்றும் ஒரு முக்கியமான குற்றச்சாட்டு அரசியல் களத்தில் அழுத்தமாக படிந்துள்ளது.. ஏற்கனவே மேற்கு வங்கத்தை போல் தமிழக சட்டப்பேரவையும் முடக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி பேசிவரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு கொஞ்சமும் இடம் தந்துவிடக்கூடாது என்ற அவசியம் திமுக மேலிடத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இதை களையத்தான் முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.. சைலேந்திர பாபு உள்ளிட்ட காவல்துறை, உளவுத்துறை உயர் அதிகாரிகளை உடனடியாக அழைத்து, தேர்தல் நாளன்று எந்த ஒரு சிறிய அசம்பாவித சம்பவங்களும் நடந்துவிடக்கூடாது.. சின்ன விஷயம் என்றாலும் அதை எதிர்க்கட்சிகள் பெரிதாக்கிவிடுவார்கள்.. அதற்கு நாம் இடம் தந்துவிடக்கூடாது.. பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிக கவனமுடன், விழிப்புடன் செய்ய வேண்டும் என்றாராம்.

இதையடுத்தே, பல்வேறு முன்னேற்பாடுகளையும் தமிழக காவல்துறை கையாண்டு வருகிறது.. தமிழகம் முழுவதும் வெளியாட்கள் வார்டுகளை விட்டு வெளியேற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு வசதியாக அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal