இதற்கு முன் கமலும் மணிரத்தினமும் 35 வருடங்களுக்கு முன்பு ‘ நாயகன் ‘ படத்தில் இணைந்தார்கள். சமீபத்தில் கமல் நடித்த விக்ரமும், மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வனும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்ததில் இப்போது இருவரும் இணைவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
கமலின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூன்றும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கே ஹெச்234 ‘(KH234).
மணிரத்தினம் இயக்கும் இந்தப் படத்தில் உலக நாயகன் கமலஹாசன் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். அவரது 234வது படமாக இது அமைகிறது. இந்தப் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதும் கூடுதல் கவனம் பெற்று இருக்கிறது.
இந்தப் படம் பற்றி மணிரத்தினம் கூறுகையில், “கமல் சாருடன் மீண்டும் இணைவது பெரிய கௌரவம் மற்றும் மகிழ்ச்சி..!” என்றார்.
இது பற்றி கமல் கூறுகையில், “35 வருடங்களுக்கு முன்பு மணிரத்தினம் படத்,தில் நடித்தபோது எனக்கு என்ன உத்வேகம் இருந்ததோ, அதே உத்வேகத்துடன் இந்த படத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன், இது ஏ. ஆர்.ரகுமான் இசையாலும், உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை கொண்டு சேர்க்கப் போகிறார் என்பதாலும் கூடுதல் உற்சாகம் பெறுகிறது..!” என்றார்.
ரெட் ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின் இந்த படம் பற்றி கூறும்போது, “கமல் சாரின் விக்ரம், அடுத்து வெளியாகவிருக்கும் இந்தியன் 2 படங்களுக்கு பின் இந்தப் படம் அமைவதில் எனக்குப் பெருமை. உலகமெல்லாம் புகழ் பரப்பும் இரண்டு பிதாமகர்களான கமல் சார் மணி சாரின் தீவிர ரசிகன் என்ற அளவில் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன். இந்த படத் தயாரிப்பில் இணைய வாய்ப்பு தந்த கமல் சாருக்கு நான் நன்றி கூறுகிறேன்..!” என்றார்.
இந்தியன்-2 திரைப்படத்தை முடித்தவுடன் மணி ரத்னம் இயக்கவுள்ள படத்தில் கமல்ஹாசன் இணைய உள்ளார் என்று கூறப்படுகிறது.