சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளதை அடுத்து வேறு அமர்வில் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட மாற்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.
பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுசம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஏற்கனவே இந்த வழக்கை இந்த அமர்வு விசாரித்து அப்போது பதில் அளிக்க காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதரார் தாக்கல் செய்த மனுவில் நீதிமன்றம் ( வழக்கை விசாரிக்கும் அமர்வு ) குறித்து சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேலும் இந்த வழக்கை இந்த அமர்வு விசாரிக்க விரும்பவில்லை, விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே வேறு அமர்விற்கு மாற்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாக உத்தரவிட்டனர்.