இயக்குநர் ரா. கார்த்திக் இயற்றிய ஒரு அழகான படம் தான் நித்தம் ஒரு வானம்.

இப்படத்தில் அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா, ஜீவா, காளி வெங்கட் மற்றும் அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தான் படிக்கும் இரு டைரிகளின் கடைசி பக்கம் இல்லாமல் போக, அந்த கதையில் உள்ள நிஜ மாந்தர்களை தேடிச் செல்லும் பயண காதல் கதையாக உருவாகியுள்ளார்.

சிறு வயதில் இருந்தே அப்பா, அம்மாவுடன் கூட நெருக்கமாக இல்லாமல் ஒரு கார்ப்பரேட் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மன நிலையோடே எல்லாவற்றிலும் 100 சதவீதம் பர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என வளர்ந்து வருகிறார் அசோக் செல்வன். புத்தகம் படிப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம். ஒரு கட்டத்தில் ஒரு பெண் மீது ஆசை கொள்ள திருமண ஏற்பாடுகள் எல்லாம் நடக்கின்றன. திருமணத்திற்கு முதல் நாள் இரவு அந்த பெண் தனது முதல் காதல் பற்றி சொல்ல அதை கேட்கும் அசோக் செல்வன் அந்த பெண்ணுக்கு மெளனம் பேசியதே படத்தில் சூர்யா கொடுப்பது போல ஒரு அட்வைஸ் கொடுக்க அந்த பெண் காதலனை தேடி சென்று விடுகிறது.

மணப்பெண் காதலனை தேடிச் செல்ல தான் காரணமாக இருந்தாலும், தனது திருமணம் தடைபட்டு விட்டதே என்கிற மன அழுத்தத்தில் பாதிக்கப்படும் அசோக் செல்வனை குணப்படுத்தும் மருத்துவராக வருகிறார் அபிராமி (விருமாண்டி நாயகி). அசோக் செல்வனைபுரிந்து கொண்டு அவர் 2 டைரிகளை கொடுத்து படிக்கச் சொல்கிறார். இரு டைரிகளிலும் வெவ்வேறு விதமான காதல் கதை. அந்த காதல் கதையின் ஹீரோவாக தன்னையே நினைத்துக் கொள்கிறார் அசோக் செல்வன். அவர் படிக்க படிக்க காட்சிகளாக திரையில் அந்த இரு காதல் கதைகளும் நம் கண் முன்னே அழகாக விரிகின்றன. ஒரு பக்கம் ஷிவாத்மிகா உடன் கல்லூரி காதல் போர்ஷன் சில்லுனு ஒரு காதல் படம் போல ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் கிராமத்தில் அபர்ணா பாலமுரளியுடன் ஒரு கதை ஓடிக் கொண்டிருக்கிறது. திடீரென கதையில் ட்விஸ்ட் போல அந்த இரு கதைகளின் கடைசி பக்கமும் இல்லை. மீண்டும் டென்ஷன் ஆகி அபிராமியிடம் கிளைமேக்ஸை கேட்க, அதை தேடி நீயே போ என சொல்ல, சண்டிகருக்கும் கல்கத்தாவிற்கும் அசோக் செல்வன் பயணப்பட அவருடன் சேர்ந்து பயணிக்கிறார் இன்னொரு ஹீரோயின் ரிது வர்மா. இரண்டு கதையிலும் தன்னை பொறுத்திப் பார்த்த அசோக் செல்வனுக்கு அங்கே இருக்கும் நிஜம் சற்றே அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் தருகிறது. அந்த இருவரது காதல் கதையும் ஹேப்பி என்டிங் ஆனதா? அசோக் செல்வன் யாரை திருமணம் செய்து கொண்டார் என்கிற ட்விஸ்ட் உடன் நித்தம் ஒரு வானம் அழகான கவிதையாக முடிகிறது.

By Divya