‘திரையிலகில் எனது மகள் வரலட்சுமியின் வளர்ச்சிக்கு யாருமே உதவவில்லை’ என சரத்குமார் மனம் உருகி பேசியிருக்கிறார்.

போடா போடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. சரத்குமாரின் மகளான இவர் முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதனால் கோலிவுட்டில் பெரும் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போதிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.

சூழல் இப்படி இருக்க பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த படமான தாரை தப்பட்டை படத்தில் கமிட்டானார் வரலட்சுமி. பாலா படம் என்றாலே நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புகள் இருக்கும் என்ற விதியின்படி இந்தப் படத்திலும் வரலட்சுமிக்கு நடிப்பதற்கான ஸ்பேஸ் இருந்தது. அதனை சரியாகவும் பயன்படுத்திக்கொண்டார் வரலட்சுமி. அந்தப் படத்தில் நடனம், நடிப்பு என அத்தனையிலும் அதகளம் செய்தார். இருப்பினும் தாரை தப்பட்டை போதிய ரசிகர்களை கவரவில்லை.

மிகச்சிறந்த நடிகை என்று பெயர் எடுத்தாலும் வரலட்சுமிக்கு பட வாய்ப்புகள் அமையாததால் சில படங்களில் மட்டுமே நடித்துவருகிரார். கடைசியாக மைக்கேல் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார். தற்போது கொன்றால் பாவம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். பிரபல கன்னட இயக்குநர் தயாள் பத்மநாபன் படத்தை இயக்க வரலட்சுமியுடன் சந்தோஷ் பிரதாப், சார்லி, இயக்குநர் சுப்ரமணியம் சிவா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் கொன்றால் பாவம் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அந்த விழாவில் சரத்குமார், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோ பங்கேற்றனர். படத்தின் ட்ரெய்லரை சரத்குமார் வெளியிட்டார். அதனையடுத்து பேசிய அவர், “எதுவும் சிறிய படம், பெரிய படம் என்றெல்லாம் கிடையாது. எந்தத் திரைப்படம் வெற்றி அடைகிறதோ அதுதான் பெரிய திரைப்படம்.

சூரிய வம்சம் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக சிலருக்கு ப்ரீமியர் ஷோ போட்டுக்காட்டினோம். படத்தை பார்த்த அனைவரும் என்ன படம் எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்றே கேட்டனர். ஆனால் அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. எனவே விமர்சனத்தை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. இது யாருக்கான படம் என்பதை மட்டும்தான் நினைக்க வேண்டும். மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தவகையில் கொன்றால் பாவம் படம் மக்கள் மனதில் இடம் பிடிக்கும்.

என்னுடைய மகள் வரலட்சுமி அவரை அவரே உருவாக்கிக்கொண்டார். அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை என்பதுதான் உண்மை. அவருடைய வளர்ச்சியை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வீரசிம்ஹா ரெட்டி படத்தில் வரலட்சுமி நடித்திருந்தார். அப்போது படம் ரிலீஸாவதற்கு முன்பே நடிகர் பாலகிருஷ்ணா என்னை ஹைதராபாத்துக்கு அழைத்து வரலட்சுமி நடித்த காட்சிகளை திரையிட்டு காண்பித்தார். அந்த சமயத்தில் வரலட்சுமியின் நடிப்பை அவர் பாராட்டினார். அந்த அளவுக்கு வரலட்சுமி சிறந்த நடிப்பை வழங்கிவருகிறார்” என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal