சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றவர் நடிகை அபர்ணா பாலமுரளி. கேரளாவை சேர்ந்த நடிகை அபர்ணா பாலமுரளி ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது நடிகர் வினித் ஸ்ரீனிவாசனுடன் தங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கான விளம்பர நிகழ்ச்சி கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் நடந்தது. விழா தொடங்கியதும் மேடையில் வினித் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் அமர்ந்து இருந்தனர். அப்போது மேடையின் முன்பிருந்த மாணவர் ஒருவர் வேகமாக மேடையில் ஏறி அபர்ணா பாலமுரளி அருகில் சென்றார். கையில் பூவுடன் சென்ற அவர், அபர்ணாவுக்கு பூ கொடுத்து அவரது தோளில் கைபோட்டார். இதனை சிறிதும் எதிர்ப்பார்க்காத அபர்ணா கூச்சத்துடன் விலகி செல்ல முயன்றார். ஆனால், அந்த மாணவரோ அபர்ணாவின் கையை பிடித்து இழுத்து போட்டோ எடுக்க முயன்றார்.

மேடையில் நடந்த இந்த நிகழ்வு, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. உடனே அவர்கள், நடிகையிடம் தவறாக நடக்க முயன்ற மாணவரை கண்டித்தனர். உடனே அவர் மீண்டும் மேடையில் ஏறி நடிகையிடம் மன்னிப்பு கேட்டார். நடிகையின் தீவிர ரசிகர் என்றும், அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவ்வாறு நடந்து கொண்டதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறினார். அதன்பின்பு அந்த மாணவர், தன்னை மன்னித்துவிடும் படி நடிகையிடம் கூறிவிட்டு அவருக்கு மீண்டும் கைகொடுக்க முயன்றார். ஆனால் நடிகை அபர்ணா அந்த மாணவருக்கு கைகொடுக்க மறுத்துவிட்டார். பின்னர் அந்த மாணவர் மேடையில் இருந்து இறங்கி சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலை தளத்தில் வைரலானது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். கேரள நடிகைகள் சிலரும் இந்த சம்பவத்தை கண்டித்து கருத்து பதிவிட்டனர். மலையாள கவிஞரும், எழுத்தாளருமான சவும்யா ராதா வித்யாதரும் இச்சம்பவத்தை கண்டித்து வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ஒரு பெண்ணின் உடலை அவரது அனுமதியின்றி தொடுவது மிகப்பெரிய தவறு. அவருக்கு தொல்லை கொடுத்தவன் மன்னிப்பு கேட்பதாக கூறி அவரிடம் மீண்டும் கைகுலுக்க முயன்றதையும் ஏற்கமுடியாது, என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நிகழ்வுக்கு திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal