பிரபல நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகளும், நடிகையுமான மதுவந்தி, பாஜக செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்துஜா லைலண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்று, ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனி 2வது குறுக்கு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கி உள்ளார். சில தவணைகள் மட்டுமே வட்டி கட்டிய நிலையில் அதனை தொடர்ந்து வட்டி செலுத்தாமல் இருந்தததால், ரூபாய் 1கோடியே 21 லட்சம் ரூபாய் கடனை செலுத்துமாறு பல முறை பைனான்ஸ் நிறுவனம் மூலமாக மதுவந்திக்கு நோட்டீஸ் அனுப்பியும் கண்டுக்கொள்ளாததால், பைனான்ஸ் நிறுவனம் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவந்தியின் வீட்டை பூட்டி சீல் வைத்து பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தது.அதனடிப்படையில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுவந்தியின் வீட்டை போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைத்து சென்றனர்.
இந்த நிலையில் வீட்டிலிருந்த 30லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மதுவந்தி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சீல் வைக்கப்பட்ட வீட்டிலிருந்த பொருட்களை ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும் என பைனான்ஸ் நிறுவனம் நோட்டீஸ் வழங்கியதாகவும், ஆனால் பொருட்களை எடுப்பதற்குள் வீட்டினை மற்றொருவருக்கு ஏலத்தில் விற்று விட்டதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மேலும் வீட்டிலிருந்த தனக்கு சொந்தமான பொருட்களை பைனான்ஸ் நிறுவனம் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் பதுக்கி வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த கடன் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பைனான்ஸ் கம்பெனியின் மண்டல மேலாளர் உமாசங்கர், கார்த்திகேயன் உட்பட 10 நபர்கள் அனுமதியின்றி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளார். இதனால் உடனடியாக தனக்கு சொந்தமான 30லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மீட்டு தர வேண்டும் என மதுவந்தியின் வழக்கறிஞர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.