சென்னையில் 20வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது இதில் பங்கேற்ற பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட திரைப்பட விழாதான் எனக்கான விழா. எனது ஆரம்பமே இங்கிருந்து தொடங்கியதுதான். இதுவரை மூன்று தேசிய விருது வாங்கிவிட்டேன். ஆனாலும் எனது ஆசை அடங்கவில்லை. இரவின் நிழல் பட்டத்திற்கு இதுவரை 114 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது. தற்போது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் என்னுடைய இரவின் நிழல் திரையிடுவது மிகவும் பெருமையான விஷயம்.
இப்படத்திற்கு 21 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் திரும்பி வந்ததா என்பது பற்றி கவலையில்லை. உலகம் முழுவதும் மக்களை சென்றடைந்துள்ளது. ரூ.75 லட்சத்தை வைத்துக்கொண்டு இப்படி ஒரு விழாவை நடத்த முடியாது. தமிழக அரசு நிதியை 1 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன்.
தமிழ் சினிமாவின் பலமே படத்தின் கருதான். தமிழர்களின் அறிவுத்திறன், தரம் உயர்ந்தது. நிறைய திறமையாளர்கள் இருந்தாலும் அதிலும் திறமையானவர்கள் யார் என்பதை தேர்வு செய்வது கடினம். வர்த்தக படங்கள் விருது படங்கள் என்று இருவகை உண்டு. கமர்ஷியல் படங்களுக்கு அதன் வருமானமே விருதுதான்.
உதயநிதியை வாரிசு என்ற காரணத்திற்காக மட்டுமே ஒதுக்கக் கூடாது. அவரிடம் அவரது தாத்தாவிடம் உள்ள திறமை ஒரு பகுதி அவரிடம் உள்ளது. உயர்ந்த பதவிக்கு செல்லும்போது ஒரு முடிவு எடுத்துத்தான் ஆக வேண்டும். பெண் சக்தி எவ்வளவு சக்திவாய்ந்தது என்பது குறித்து ஒரு படம் எடுக்க உள்ளேன் எனத் தெரிவித்தார்.
மூன்று முறை தேசிய விருது வாங்கியிருந்தாலும் இதுவரை அவரது ஆசை அடங்கவில்லை என இரவின் நிழல் படத்திற்கான தனது எதிர்பார்ப்பை நடிகர் பார்த்திபன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.