இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் வைகைப்புயல் வடிவேலு. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த நகைச்சுவை திரில்லர் படத்தில் அவர் துப்பறியும் நபராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஆனந்த்ராஜ், யூ-ட்யூபர் பிரசாந்த், ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி, ஷிவானி நாராயணன் மற்றும் லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதற்கிடையே இன்று திரையரங்குகளில் வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
ஆறு ஆண்டுகளாகக் குழந்தைப் பேறு இல்லாமல் தவிக்கும் வேல.ராமமூர்த்தி தன் குடும்பத்தோடு பைரவர் கோயிலுக்குப் போகும்போது, சாமியார் ஒருவர் அவருக்குத் தெய்வ அருள் பெற்ற நாய்க் குட்டி ஒன்றைத் தருகிறார். நாயோடு சேர்ந்து வேல.ராமமூர்த்தியின் குடும்பமும் செல்வச் செழிப்போடு வளர, கதாநாயகன் வடிவேலுவும் பிறக்கிறார். திடீரென ஒரு நாள் தெய்வ அருள் பெற்ற நாய் திருடப்படுகிறது.
மறுபுறம், சமகாலத்தில் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து நாய்களைக் கடத்தி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் India’s First Dog Kidnapper ஆக இருக்கிறார் நாய் சேகரான வடிவேலு. ஒரு நாள் ‘நாய் மாற்றி’, தாதாவான ஆனந்த் ராஜின் நாயை வடிவேலு கடத்துகிறார். வடிவேலுவைக் கொலை செய்யக் கிளம்புகிறார் ஆனந்த்ராஜ். ஆனந்தராஜிடமிருந்து தப்பித்தாரா, திருடப்பட்ட தெய்வ நாய் என்ன ஆனது, அந்த நாயை வடிவேலு மீட்டாரா என்ற கதையைச் சிரிக்கச் சிரிக்க சொல்ல முயன்றிருக்கிறது வடிவேலு – சுராஜ் கூட்டணி.
ஒரு காமெடி படத்திற்கு நாய்களை மையமாக வைத்துக் கதைக் கருவை எழுதியிருப்பதும், அதற்கு வடிவேலுவின் பிரபலமான ‘நாய் சேகர்’ என்ற கதாபாத்திரத்தின் பெயரை நாயகனுக்குப் பொருத்தியிருப்பதும் சரிதான். ஆனால், அந்தப் பெயருக்கும் கதைக்கும் படம் எந்த விதத்திலும் நியாயம் செய்யவில்லை. முதற்காட்சியிலேயே ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி, இட்ஸ் பிரசாந்த் என தன் கூட்டாளிகளுடன் களமிறங்கும் வடிவேலு, ‘இப்ப இவங்கதான் என் ஃப்ரெண்ட்டு; இதான் என் ட்ரெண்ட்டு’ என ஓப்பன் ஸ்டேட்மென்ட்டை வைக்கிறார். இந்த ட்ரெண்ட் யுக்தி கூட்டாளிகளோடு நின்று விடுகிறது. காமெடியில் கரென்ட் ட்ரெண்ட்டை விட்டுவிட்டு பழைய பாணியையே கையாண்டிருக்கிறார்கள்.
அதனால், திரைக்கதை மட்டுமல்ல காமெடி காட்சிகளும் எளிதில் யூகிக்கும்படியே இருக்கின்றன. சில இடங்களில், ரெடின் கிங்ஸ்லியுடன் வடிவேலு சேர்ந்து அடிக்கும் ஒன் லைன் காமெடிகள் கைதட்டல் பெறுகின்றன. இத்தனை நகைச்சுவை நடிகர்கள் நடித்திருந்தும் படத்தில் காமெடி, முன்பு இருந்த வடிவேலுவின் சிறப்பு இல்லையென்றும் அவரோட நடிப்பும் ஏமாற்றத்தை கொடுத்தது என்று ரசிகர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.