மெட்ராஸ் ஐ என்பது, ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு அதிவேகமாக பரவுகின்ற ஒரு பொதுவான நோய் பாதிப்பாகும். இது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படுகிறது.
கண்ணிலிருந்து சுரக்கும் திரவங்களின் வழியாக கண் வெண்படல அழற்சி பரவுகிறது. ஒரு நபர் அவரது / அவளது கண்ணை தொட்டுவிட்டு, தொற்று பரவக்கூடிய வைரஸ் அல்லது பாக்டீரியாவை கண் சுரப்போடு தொடர்பு கொள்ளக்கூடிய வேறொரு நபருக்கு அல்லது பொருளுக்கு பரப்பி விடுவார். ஆனால், ஒவ்வாமையினால் ஏற்படும் கண் வெண்படல அழற்சி மற்றும் வேதிப்பொருட்கள் அல்லது எரிச்சலூட்டிகளினால் வரக்கூடிய கண் அழற்சி ஒரு நபரிடமிருந்து, மற்றொரு நபருக்குப் பரவுவதில்லை.

மெட்ராஸ் ஐ’ன்  அறிகுறிகள்:

கண் எரிச்சல், நீர் வடிதல், கண் சிவத்தல், ஒட்டிக்கொள்கிறவாறு கண்ணிலிருந்து அழுக்கு வெளியேற்றம் மற்றும் வெளிச்சத்தைப் பார்க்க கூச்சம் ஆகியவையாகும். கண்ணின் கருப்பு நிற படலத்தின் மீதான அடுக்கான கருவிழியில் தொற்று இருக்குமானால், அதன் காரணமாக மங்கலான பார்வை ஏற்படக்கூடும். தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்ட இந்த வைரல் தொற்று, சில நோயாளிகள் மத்தியில் கண் வீக்கம் மற்றும் அழற்சியை ஏற்படுத்துகிறது. இப்பாதிப்புகள் குணமாவதற்கு அவர்களுக்கு நீண்டகாலம் எடுக்கிறது.
மெட்ராஸ் ஐ என்பது, மிக அதிகமாகவும், வேகமாகவும் பரவக்கூடிய ஒரு தொற்றாகும். டவல்கள், தலையணை உறைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் போன்ற தனிப்பட்ட பொருட்களின் வழியாகத்தான் ஒரு நபரிடமிருந்து, மற்றொரு நபருக்கு இது எளிதாகப் பரவக்கூடியது. ஆகவே, இத்தொற்று பாதிப்புள்ள நபரை தனிமைப்படுத்துதல் முக்கியமானது.


இக்கண் தொற்றுள்ள நோயாளிகள், அவர்களது கண்களிலிருந்து வரும் திரவ வெளியேற்றத்தை துடைக்க பேப்பர் நாப்கின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்றும் அவ்வாறு பயன்படுத்திய நேப்கின்களை உடனடியாக பத்திரமாக அகற்றிவிட வேண்டும். தொற்று ஏற்படும்போது பயன்படுத்திய பழைய கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றிவிட்டு அவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு புதிய கான்டாக்ட் லென்ஸ்களை அணியவேண்டும்.

வழக்கமாக பயன்படுத்துகின்ற, திரும்பத்திரும்ப பயன்படுத்தக்கூடிய கைக்குட்டைகளை இந்நோயாளிகள் பயன்படுத்தக்கூடாது. தங்களது கைகளை இவர்கள் அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்; மற்றும் தொற்றுப் பரவாமல் தடுக்க, தங்களது தனிப்பட்ட பயன்பாட்டுப் பொருட்களை பிறர் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.

ஆதலால் கண்களில் ஏதேனும் எரிச்சலோ வலியோ தென்பட்டால் உடனே கண் மருத்துவரை அணுகவும்.

By Divya