ஒடிசாவில் நடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ‘ஒடிசாவில் இருக்க வேண்டிய சாவி (கீ) தமிழகத்தில் இருக்கிறது’ என்று தமிழ்நாட்டை தாக்கி பேசிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.
நேற்று 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. பீகார் 55.62%, ஜம்மு & காஷ்மீர் 58.79%, ஜார்கண்ட் 63.89%, லடாக் 72.02%, ஒடிசா 69.43% மகாராஷ்டிரா 54.33%, உ.பி 57.79%, மேற்கு வங்காளம் 76.64% வாக்குகள் பதிவாகி உள்ளது. இனி 6ம் மற்றும் 7ம் கட்ட தேர்தல்கள் நடக்க உள்ளன. மே 25ம் தேதி 6ம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. மக்களவைத் தேர்தலின் ஆறாவது கட்டத் தேர்தலில் எட்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஒடிசாவில் நடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி திடீரென தமிழ்நாட்டை தாக்கி பேசிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், தமிழ்நாட்டை சேர்ந்த பிஜேடியின் முக்கிய தேர்தல் வியூகவாதியுமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை மறைமுகமாக விமர்சித்த மோடி, பூரி ஜெகநாதர் கோவிலின் ரத்தின பண்டரின் (புதையல்) சாவியை அவர் தமிழ்நாட்டிற்கு எடுத்துக்கொண்டு போய்விட்டார். இங்கே இருக்க வேண்டிய சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது. நமது சொந்த வீட்டின் சாவி கிடைக்காதபோது,ஜெகநாதரை வேண்டிக்கொள்கிறோம், சாவியைக் கண்டுபிடிக்க அவரது வேண்டுதலை பெறுகிறோம்…
ஆனால் அப்படிப்பட்ட கோவிலின் ரத்ன பண்டரின் சாவிகள் ஆறு ஆண்டுகளாக காணவில்லை. நாம் எங்கே போய் முறையிடுவது. ஸ்ரீ ரத்ன பண்டரின் சாவி தமிழகத்திற்குப் போய்விட்டதாக மக்கள் சொல்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு அனுப்பியது யார்? இங்குள்ள விவசாயிகள் பிரச்சனையில் உள்ளனர். இளைஞர்கள் வேலைக்காக பிற மாநிலங்களுக்குச் செல்கின்றனர். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கனிம வளங்கள் அதிகம் இருந்தும், இடம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு வளங்கள் இருந்தும் இங்குள்ள மக்கள் ஏன் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்? ஒடிசாவின் நிலையைப் பார்த்து நான் வேதனையடைந்தேன்.
ஒடிசாவின் வருந்தத்தக்க நிலைமைக்கு யார் பொறுப்பு? சில ஊழல்வாதிகளின் கட்டுப்பாட்டில் பிஜேடி அரசு உள்ளது. ஒரு சில ஊழல்வாதிகள் முதல்வர் அலுவலகம் மற்றும் இல்லத்தை ஆக்கிரமித்துள்ளனர். பிஜேடியின் சிறு தொழிலாளர்கள் இப்போது கோடீஸ்வரர்களாகிவிட்டனர், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் நடந்த பிரச்சாரத்திலும் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் உத்தர பிரதேசத்தை கிண்டல் செய்வதாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிற்கான லோக்சபா தேர்தல் முதல் கட்ட தேர்தலிலேயே முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.