பிரபல நடிகர் விஷால் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் ‘ரத்னம்’ என்ற படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிரபல இயக்குனர் ஹரியோடு இணைந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ள பிரபல நடிகர் விஷால் தற்பொழுது மீண்டும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் ‘ரத்னம்’.

அரண்மனை 4 திரைப்படத்தோடு போட்டி போடும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த போட்டியில் இருந்து அரண்மனை 4 திரைப்படம் விலகியுள்ள நிலையில் சிங்கிளாக ரத்னம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் அப்பட குழுவினர் தொடர்ச்சியாக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் சென்னையில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் விஷால் ஆகியோர் பதில் அளித்து வந்தனர். 

அப்பொழுது பிரபல சினிமா விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அவர்கள் ஏற்கனவே விஷால் கூறிய ஒரு கருத்து குறித்த சர்ச்சையான கேள்வியை எழுப்பினார். சிறிய பட்ஜெட்டில் படம் செய்ய வர வேண்டாம் அது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றீர்கள். 

ஆனால்  மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் ப்ரேமலு போன்ற திரைப்படங்கள் மிக குறைந்த அளவிலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கதை நன்றாக இருந்ததால் அவை சூப்பர் ஹிட் படங்களாக மாறியது. இதற்கு என்ன சொல்ல வருகிறீர்கள் இது எப்படி சாத்தியமானது என்று கேட்க இதைக் கேட்ட நடிகர் விஷால் சட்டென கோபமடைந்தார்.

முதலில் யார் இந்த கேள்வியைக் கேட்டது என்று விஷால் கேட்க, செய்தியாளர்கள் அனைவரும் பயில்வான் ரங்கநாதன் சார் தான் இந்த கேள்வியை கேட்டார் என்று கூறினார்கள். உடனே விஷால் “சத்தியமா நான் அவருக்கு பதில் சொல்லமாட்டேன். அண்ணா கேட்ட கேள்விக்கு நான் வெளியில் சென்று பதில் கூறுகின்றேன். ஒரு பொதுச்செயலாளராக என்னை பேசவைக்க வேண்டாம், நிச்சயம் நான் பயில்வான் அண்ணன் கேள்விக்கு பதில் சொல்லமாட்டேன்” என்றார் அவர். 

சர்ச்சையான பல கேள்விகளை முன் வைப்பதற்கு பெயர் பெற்றவர் தான் மூத்த நடிகரும், பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன். அண்மையில் நடிகை மீனா அவர்களுடைய திருமணம் குறித்து பேசி தமிழ் சினிமா ரசிகர்களின் கடும் கோபத்துக்கு அவர் உள்ளானது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal