மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திரைப்பட சூட்டிங் இல்லாமல் இருந்தால், வாய்ப்பு கிடைக்குமேயானால் நிச்சயம் ஒரே கட்சி, ஒரே கொள்கை என்று இருக்கக்கூடிய அ.தி.மு.க.விற்கு தேர்தல் பிரசாரத்திற்கு நான் வருவேன். எனது பிரசாரம் பிற கட்சியினரையோ அல்லது பிற நபர்களையோ வசைபாடுவது குறித்து இருக்காது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த நலத்திட்டங்கள் மற்றும் புரட்சித் தமிழர் எடப்பாடியார் தமிழக மக்களுக்கு கொடுத்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறி தேர்தல் பிரசாரம் செய்வேன்.
பாசக்கார ஊர் என்றால் அது மதுரை தான். மேலும் நான் பிறந்த சொந்த ஊர் மதுரை அருகே தேனி இருப்பதால் இங்கு நடைபெறக் கூடிய அனைத்து நிகழ்வுகளுக்கும் நான் கலந்துகொள்கிறேன். தற்போதுள்ள சூழலில் வில்லன் மற்றும் கதாநாயகியின் தந்தையாக போன்ற கதாபாத்திரங்களில் மட்டுமே தற்போது நடித்து வருகிறேன். படப்பிடிப்பு இல்லையென்றால் நிச்சயமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். வில்லன்கள் காமெடியன் ஆகி விட்டார்கள், காமெடியர்கள் வில்லன்கள் ஆகி விட்டனர். இந்த நிலையில் கதாநாயகனாக நடிப்பதற்காகவே அனைவரும் திரையுலகத்திற்குள் வருகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் கதாநாயகனாக நடிப்பேன்’. இவ்வாறு அவர் கூறினார்.