பிரபல பாடகியாகவும், நடிகையாகவும் இருக்கும் ஆண்ட்ரியா… தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்த மோசமான அனுபவங்களை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில், ஒரு பாடகியாக அறியப்பட்டு… பின்னர் நடிகையாக அவதாரம் எடுத்தவர் ஆண்ட்ரியா. கடந்த 2005-ம் ஆண்டு வெளியான, ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும், இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிய திரைப்படம், இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்த ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ திரைப்படம் தான்.
இந்த படத்தை இயக்குனர் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில், கார்த்தி, ரீமாசென் ஆகியோர் நடித்திருந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில்… இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து, அளவுக்கு அதிகமான கவர்ச்சியால் ரசிகர்களை கவர்த்திழுத்தார். இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் நடித்த மங்காத்தா, கல்ஹாசனுடன் விஸ்வரூபம், வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை, விஜய்யுடன் மாஸ்டர் என முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து வெயிட்டான ரோல்களை தேர்வு செய்து நடித்தார்.
ஒரே மாதிரியான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்காமல், கதைக்கும்… கதாபாத்திரத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னரும் இன்னும் இப்படங்கள் வெளியாகாமல் உள்ளது.
நடிகையாக மட்டும் இன்றி ஒரு பாடகியாகவும், ஜொலித்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா… சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவராகவே உள்ளார். அனிருத்துடன் காதல், மூத்த நடிகருடன் நெருங்கிய பழக்கம் என பல சர்ச்சைகளில் சிக்கிய இவர், சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய சிறு வயதில் பேருந்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளான விஷயம் குறித்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அப்போது எனக்கு 11 வயது இருக்கும். நான் என் பெற்றோருடன் பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். ஜீன்ஸ் மட்டும் டீ ஷர்ட் அணிந்திருந்தேன். என் அப்பா அருகில் தான் அமர்ந்திருந்தார். அப்போது என் டீ-ஷர்டுக்குள் ஒருவர் கை விடுவதை உணர்ந்தேன். பின்னர் யாரிடமும் எதுவும் சொல்லாமல் அப்பா பக்கத்தில் வந்து பயத்துடன் அமர்ந்து கொண்டேன் என கூறியுள்ளார். இதை யாரிடமும் சொல்லாததற்கு என்ன காரணம் என அப்போது எனக்கு புரியவில்லை அழுகை தான் வந்தது என தெரிவித்துள்ளார்.
ஆண்ட்ரியா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த இந்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட பின்னர், ரசிகர்கள் இவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.