கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகை பூனம் பாண்டே உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 32. பூனம் பாண்டேவின் மரணத்தை அவரது மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவரது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பூனம் பாண்டே மரணம் குறித்த அறிக்கையை அவரது குடும்ப உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர். அந்தப் பதிவில், “இன்று காலை எங்களுக்கு கடினமான நேரமாக அமைந்துவிட்டது. எங்கள் அன்புக்குரிய பூனம் பாண்டேவை கர்ப்பப்பை புற்றுநோயால் இழந்துவிட்டோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பதிவு பூனம் பாண்டேவின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனினும், இப்பதிவின் உண்மை நிலை குறித்தும் ரசிகர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால் அவரின் இறப்பை வட இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஊடகத்திடம் பேசிய பூனம் பாண்டே மேலாளர், ”புற்றுநோய் இருந்தது உண்மைதான். உ.பி.யில் பூனம் பாண்டேவின் சொந்த ஊரில் இறுதிசடங்குகள் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
2013-ம் ஆண்டு வெளியான ‘நாஷா’ படத்தின் மூலம் பாலிவுட் திரைத்துறையில் அறிமுகமானவர் பூனம் பாண்டே. மாடலாகவும் நடிகையாகவும் பாலிவுட் திரையுலகில் வலம்வந்த பூனம், திரைப்படங்களைத் தாண்டி கங்கனா ரனாவத் நடத்திய ரியாலிட்டி ஷோவான ‘லாக் அப்’ மூலம் பிரபலமானார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் தைரியமாக பதிவுகளை வெளியிடும் பூனம், பல தொண்டு பணிகளையும் செய்துள்ளார். அவரின் இறப்பால் பாலிவுட் திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.