90களின் இறுதி வரை பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு சாதனமாக இருந்தவை திரையரங்குகளும், தொலைக்காட்சியும் மட்டுமே. புதிய திரைப்படங்கள் வெளிவரும் போதெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடங்களாக அரங்கங்கள் காட்சியளித்ததை இன்றளவும் சினிமா ரசிகர்கள் நினைவு கூர்கின்ற. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய உதயம் திரையரங்கின் பயணம் நிறைவு பெறுகிறது.

சென்னை அசோக் நகரில் 1983-ம் ஆண்டில் 1.3 ஏக்கரில் உதயம் திரையரங்கு கட்டப்பட்டது. இந்தத் திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய திரைகள் இயங்கி வந்தன. ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பிரபலங்களின் படங்களை திரையிட்ட பெருமை உதயம் தியேட்டருக்கு உண்டு. “உதயம் தியேட்டரில, என் இதயத்தை தொலச்சேன்…” என இசையமைப்பாளர் தேவா ஒரு திரைப்படத்தில் பாடலே பாடியிருப்பார்.

ஆனால், கடந்த 15 வருடங்களாக, காலத்தை வென்ற திரைப்படங்களை திரையிட்ட அரங்குகளுக்கு “மல்டிப்ளெக்ஸ்” வடிவ திரையரங்குகள் கடும் போட்டியை கொடுத்து வருகின்றன. வர்த்தக ரீதியாக 80களிலும் 90களிலும் ஈட்டிய வருவாயை மீண்டும் எட்ட முடியாமல், அதிகரிக்கும் பராமரிப்பு  செலவு மற்றும் பணியாட்கள் ஊதியம், வரிகள், மின்சார கட்டணம் என பல்வேறு செலவினங்களை சமாளிக்க முடியாமல், பல திரையரங்கங்கள், வணிக வளாகங்களாகவும், அபார்ட்மென்ட்களாகவும் உருமாறின. இதில், தற்போது “உதயம் காம்ப்ளெக்ஸ்” இணைந்துள்ளது.

உதயம் திரையரங்க உரிமையாளர்கள், சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனம் (காஸா கிராண்ட்) ஒன்றுடன் செய்து  கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, “உதயம் காம்ப்ளெக்ஸ்” முற்றிலும் இடிக்கப்பட்டு அங்கு புதிய கட்டிடம் அமையவுள்ளது. 40 வருடங்களாக மக்கள் நினைவில் நிற்கும் ஒரு முக்கிய இடமாகும். ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பல வெற்றி திரைப்படங்களை இங்கு கண்டது பசுமையாக நினைவில் உள்ளதாக கூறும் திரைப்பட ரசிகர்கள், “உதயம்” இடிபடும் செய்தியை கனத்த இதயத்துடன் ஏற்கின்றனர். திரைப்பட வளாகமாக மட்டுமின்றி சென்னைக்கு ஒரு அடையாளமாகவும் இருந்து வந்தது “உதயம் காம்ப்ளெக்ஸ்” என்றால் அது மிகையாகாது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal