மிச்சாங் புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சென்னை சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரைத்துறையினர் பலர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு காசோலைகளை வழங்கி வருகின்றனர். சில நடிகர்கள் பாதிப்பு பகுதிகளில் நேரடியாக சென்று உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்பு நிவாரண பொருட்களை புயல் பாதித்த பகுதிக்கு அனுப்பி வைத்தார். புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார். கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து லாரிகள் மூலம் மளிகை பொருட்கள், பெட்சீட் மற்றும் நிவாரண பொருட்கள் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.