‘மிச்சாங்’ புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நடிகர்கள் மற்றும் சின்னத்திரை பாலா மற்றும் பலர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் அரும்பாக்கத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாக காரின் மேல் அமர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,” இது அரும்பாக்கம், திருக்கமலம் கோயில் மூன்றாவது தெரு. 100 மீட்டர் தொலைவில் கூவம் ஆறு உள்ளது. செம்பரம்பாக்கம் தண்ணீர் நம்ம ஏரியாவிற்கு வருவது அரிது. அணை தண்ணீர் திறந்துவிட்டால் இங்கே தண்ணீர் வந்துதான் ஆகும். கூவம் ஆறை ஒட்டியுள்ள பகுதி இது என்பதால் தண்ணீர் வரும். பலரும் தாழ்வாக கட்டிவிட்டார்கள். நான் கொஞ்சம் உயரமாக வீடு கட்டியதால் தப்பித்தேன்.

எல்லாவற்றிற்கும் பெருநகர மாநகராட்சியை, அரசை குறை சொல்ல முடியாது. ஏனெனில், செம்பரம்பாக்கம் அணையில் நீர் அதிகமாக இருந்தால் அதை திறந்துவிட்டே ஆக வேண்டும். இல்லையெனில் அணை உடைந்துவிடும். ஏரி கரையில் உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் வந்துவிட்டது. ஏனெனில், பெரும் மழை, புயல். எதுவும் செய்ய முடியாது. அரசை குறை சொல்லி ஒரு பயனும் இல்லை. நிஜத்தை பேசணும். கூவம் ஆற்றிற்கு அருகில் தாழ்வான பகுதிகளில் உள்ள எல்லாரும் பாதிக்கப்படுவார்கள். எல்லாம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டது.

ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதால் இந்த வேதனைகளையெல்லாம் தாங்க
வேண்டியதாக இருக்கிறது. செம்பரம்பாக்கம் அதிக கொள்ளளவு கொண்ட ஏரி. அது நீர் நிரம்பி உடைந்துவிட்டால் சென்னையே மூழ்கிவிடும்.” என்று கூறினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal