வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், அதுகுறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார்.
லியோ படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. சென்னை 28, மங்காத்தா, மாநாடு போன்ற மாஸான ஹிட் படங்களை கொடுத்த வெங்கட் பிரபு தான் இப்படத்தை இயக்கி வருகிறார். விஜய்யுடன் அவர் இணையும் முதல் படம் இது என்பதால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறிய வண்ணம் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் உடன் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, வைபவ், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், கஞ்சா கருப்பு, பிரேம்ஜி, ஜெயராம், மைக் மோகன், நிதின் சத்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விஜய்யை இளமை தோற்றத்தில் காட்ட டீ ஏஜிங் டெக்னாலஜியையும் பயன்படுத்தி இருக்கிறார்களாம்.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட தளபதி 68 திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்திய படக்குழு பின்னர் தாய்லாந்து சென்று அங்கு அதிரடி ஆக்ஷன் காட்சி ஒன்றை படமாக்கியது. தற்போது இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக தளபதி 68 படக்குழுவினர் ஐதராபாத்தில் முகாமிட்டு உள்ளனர்.
இதனிடையே தளபதி 68 படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு தகவல்கள் கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் உலா வந்த வண்ணம் உள்ளன. அதன்படி இப்படத்திற்கு பாஸ் அல்லது பசில் என பெயரிடப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்த டைட்டில் குறித்த அறிவிப்பு டிசம்பர் 31-ந் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அர்ச்சனா கல்பாத்தி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அந்த பதிவில், “இப்போ தான் எல்லா அப்டேட்டையும் பார்த்தேன். உங்களின் அன்புக்கு நன்றி. உண்மையான ஒன்று வெளியாகும் வரை அமைதியாகவும், பொறுமையாகவும் இருங்கள். இயக்குனர் வெங்கட் பிரபு ரொம்பவே ஸ்பெஷலான ஒன்றை தயார் செய்துகொண்டிருக்கிறார். கண்டிப்பாக அது பாஸும் இல்லை பசிலும் இல்லை” என பதிவிட்டு டைட்டில் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.