மெர்குரி குரூப் இந்தியா, தென்னிந்தியப் பொழுதுபோக்கு மற்றும் திரை வணிகங்களை மையமாகக் கொண்டு, கனெக்ட் மீடியாவுடன் இணைந்து மெர்குரி மூவிஸ் என்ற சிறப்புப் பிரிவாக செயல்பட உள்ளது. புதிய ஸ்ட்ரீமிங் கதைகள் , ஒரிஜினல் கதைகள், தென் சினிமாவில் பல புதிய வகை கதைகளின் வழியாக ஒரு புதிய உலகத்தை இந்த கூட்டணி ரசிகர்களுக்கு வழங்கும். இந்த கூட்டணி, தங்கள் முதல் திரைப்படமாக, தென்னிந்தியத் திரையுலகில் மாபெரும் சாதனையாளரான இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை உருவாக்க உள்ளது.

இத்திரைப்படத்தில் பன்முக திறமையாளர், தென்னிந்தியாவின் பிரபல நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அக்டோபர் 2024-இல் தொடங்க உள்ளது, 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இத்திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமத்தின் இணைவு குறித்து, கருத்து தெரிவித்த கனெக்ட் மீடியாவின் வருண் மாத்தூர் கூறியதாவது, உலகளாவிய பொழுதுபோக்கு திரைத்துறையில் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்று மெர்குரி.

எங்களுக்கு ஒரு அற்புதமான கூட்டணியாக மெர்குரி இருந்து வருகிறது, மேலும் அவர்களுடன் இணைந்து பல மெகா பட்ஜெட் படங்களைத் தயாரிப்பதிலும் ஒரு மிகச்சிறந்த இசை மேதையின் வரலாற்றைத் திரைப்படமாக உருவாக்குவதிலும், நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறினார். பல நாட்களாக இளையராஜா வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் நடிப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது இது உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal