நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று வெளியானது. ஈரோடு மாவட்டத்தில் 19 தியேட்டர்களில் லியோ படம் வெளியாகி உள்ளது. இதனையொட்டி தியேட்டர்களுக்கு முன்பாக ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும், மேளதாளம் இசைத்தும் மகிழ்ச்சியை கொண்டாடினர். காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கின. முன்னதாக தியேட்டர்களுக்குள் ரசிகர்கள் அனைவரும் ஊழியர்களின் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப் பட்டனர். சோதனையின் போது மதுபாட்டில்கள், பட்டாசு, கலர் பொடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திரையரங்குகளுக்குள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் தடை விதித்தனர். மேலும் ரசிகர்களை கண்காணிக்க கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. ஈரோட்டில் ஒரு தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்றில் விஜய்-யை வருங்கால முதல்வர் என்றும், விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளைவருங்கால அமைச்சர், வருங்கால எம்.எல்.ஏ, வருங்கால கவுன்சிலர் என பேனர் வைத்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. முன்னதாக தியேட்டர்களில் படத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. லியோ படம் வெளியாகும் தியேட்டரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal