நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் ஒரு சீன் வந்த சில்க் ஸ்மிதா எல்லோர் மனதையும் கவர்ந்துவிட்டார். மீண்டும் சில்க் ஸ்மிதாவின் பேச்சுதான் திரையுலகில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
சில்க் ஸ்மிதா, தமிழ் திரையுலக வரலாற்றில், ஏன் ஒட்டுமொத்த உலக சினிமா வரலாற்றிலேயே ஒரே வருடத்தில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஒரே நடிகை இவராகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு வெகு சில ஆண்டிகளில் புகழின் உச்சிக்கே சென்ற நடிகை அவர். செப்டம்பர் 23 (இன்று) அவருடைய 27வது நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது 19ஆவது வயதில் மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கிய விஜயலட்சுமி என்னும் ஸ்மித்தாவை, சில்க் ஸ்மிதா என்று தமிழில் அறிமுகம் செய்தவர், வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தின் எழுத்தாளரும் பிரபல இயக்குனரும், நடிகருமான வினு சக்கரவர்த்தி தான். தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமான ஒரு சில ஆண்டுகளிலேயே 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து முடித்தார். புகழின் உச்சிக்கே சென்ற இவர் அடிக்கடி கிசுகிசுக்கப்பட்ட ஒரு நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
மூன்று முகம், தனிக்காட்டு ராஜா, தாய் வீடு, பாயும் புலி, தங்க மகன், ரங்கா மற்றும் துடிக்கும் கரங்கள் என்று பல சூப்பர் ஸ்டாரின் திரைப்படங்களில் சில்க் ஸ்மிதா நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தது அந்த கிசுகிசுப்புக்கு ஒரு காரணம் என்று கூறினால் அது மிகையல்ல. சினிமா துறையை பொருத்தவரை உச்சத்தில் இருக்கும் இரு நடிகர்கள் கிசுகிசுக்கப்படுவது இயல்புதான் என்ற பொழுதும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சில்க் ஸ்மிதா இருவரும் அதை எப்பொழுதும் மறுத்தே வந்தனர்.
கவர்ச்சியான நடனங்களை ஆடினாலும் கூட, உள்ளத்தின் அளவில் மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட சில்க் ஸ்மிதாவிற்கு பெரிய அளவில் நண்பர்கள் கிடையாது. இதுவே இவர் மரணம் இன்றளவும் ஒரு மர்மமாக இருக்க முக்கிய காரணம் என்று கூறலாம். இந்திய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து உச்சகட்ட நாயகியாக திகழ்ந்து வந்த சில்க் ஸ்மிதா, தனக்கென்று ஒரு வாழ்க்கை துணையை தான் இறுதிவரை தேடி வந்தார் என்று கூறப்படுகிறது.
ஆனால் இறுதி வரை அன்பிற்காக ஏங்கிய நடிகை சில்க் ஸ்மிதா தனது 36வது வயதில் செப்டம்பர் 23ஆம் 1996ம் ஆண்டு தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அந்த ஆண்டு அவர், நடிகர் அர்ஜுன் அவர்களின் சுபாஷ் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது நடிகர் அர்ஜுனிடம் “என் இறப்பிற்கு நீ வருவாயா..” என்று கேட்டதாகவும், அர்ஜுன் அதற்கு கடிந்துகொண்டு “இப்படியெல்லாம் பேச வேண்டாம்” என்று கூறியதாக பேசப்பட்டது. ஆனால் அவரிடம் அப்படி பேசிய வெகு சில நாட்களுக்கு பிறகு சில்க் ஸ்மிதா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அர்ஜுனுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. சில்க் ஸ்மிதாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஒரே பிரபலம் அர்ஜுன் தான் என்றும் கூறப்படுகிறது.