தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். விஜய் சேதுபதி கடந்த 2021-ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குனர் பிச்சிபாபு சனாவின் இயக்கத்தில் ‘உப்பென்னா’ என்ற திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாக நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

மேலும், தேசிய விருதையும் பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் வெளியான ‘லாபம்’ திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டியை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்துவிட்டார். இது குறித்து அவர் அப்போது விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, “லாபம் படத்தில் கீர்த்தி ஷெட்டியை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என பட நிறுவனம் கூறியது.

அதே நேரத்தில் தெலுங்கில் உப்பென்னா படத்தில் அவருக்கு தந்தையாக நடித்துக் கொண்டிருந்தேன். அப்பாவாக நடிக்கும் போது எப்படி என்னால் ரொமான்ஸ் செய்ய முடியும் என்று கூறி மறுத்துவிட்டேன். ‘உப்பென்னா’பட கிளைமேக்ஸ் காட்சியில் நான் கீர்த்தியிடம், என்னை உங்களின் தந்தையாக நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். கீர்த்திக்கு என் மகன் வயது தான் இருக்கும். கீர்த்தியை என் மகளாகதான் நான் பார்த்தேன். என்னால் அவருடன் நிச்சயமாக என்னால் ரொமான்ட்டிக்காக நடிக்க முடியாது” என்று பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal