தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அரங்கத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுப்பொருளானது.

இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் தவறுகளுக்கு வருந்துவதாக தெரிவித்திருந்தார். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தவறுகளுக்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தனர். இந்த நிகழ்ச்சி மூலம் ஏ.ஆர்.ரகுமான் ஊழல் செய்ததாக பலர் விமர்சித்து வந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது மகள் கதீஜா ரகுமான் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “இசை நிகழ்ச்சி மூலம் ஏ.ஆர்.ரகுமான் ஊழல் செய்ததை போல சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

சிலர் இந்த விவகாரத்தில் மலிவான அரசியல் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் அனைத்திற்கும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தான் 100 சதவீதம் காரணம். எனினும் ஏ.ஆர்.ரகுமான் அதற்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் 2016 -ஆம் ஆண்டு சென்னை, மதுரை, கோவை மாவட்டங்களில் ‘நெஞ்சே எழு’ என்ற இசை நிகழ்ச்சி நடத்தியவர், கேரள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 2018- ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் உதவினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு பல உதவிகளை செய்தார். திரைத்துறையில் ஏழ்மை நிலையில் உள்ள லைட் மேன்களுக்கு உதவும் நோக்கில் இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்தினார். அவர் குறித்து பேசும் முன் இதனையெல்லாம் யோசித்து பேசுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal