நடிகர் விஜய் சமீபகாலமாக தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கி விஜய் ரசிகர்கள் மக்கள் சேவையில் இறங்கினர்.

234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று பேசி விஜய் அரசியல் அரங்கை அதிர வைத்தார். இது மட்டுமின்றி தலைவர்கள் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாவீரர் வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் திரண்டு வந்து எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதைத் தொடர்ந்து காமராஜர் பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் திரளாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் எராளமான இடங்களில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள ஜிம்கானா கிளப் காமராஜர் சிலைக்கு மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காமராஜர் பிறந்த நாளையொட்டி 234 தொகுதிகளிலும் ஏழை மாணவ-மாணவிகள் பயில இரவு பாடசாலை திட்டமான ‘தளபதி விஜய் பயிலகம்’ இன்று மாலை முதல் தொடங்கப்பட உள்ளது. சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் விஜய் பயிலகம் தொடங்குவதற்கான பணிகள் முடி வடைந்த நிலையில் அங்கு இன்று மாலை முதல் மாணவ-மாணவிகளுக்கு கல்வி பயிற்சி அளிக்கப்படு கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal