தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை நேற்று முன்தினம் படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
ஜவான் படத்தின் முன்னோட்ட வீடியோவை பாராட்டி இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். அதில், “பாலிவுட்டில் அறிமுகமாகும் படத்திலேயே சிறப்பாக பணியாற்றி இருக்கும் இயக்குனர் அட்லியை நினைத்து பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை. முன்னோட்ட வீடியோ சர்வதேச தரத்தில் உள்ளது. அட்லியின் பொறுமையும் கடின உழைப்பும் நன்றாக தெரிகிறது. எனது சார்பாக மிகுந்த பாராட்டும் அரவணைப்பும். நயன்தாராவின் பாலிவுட் அறிமுகமே ஷாருக்கானுடன் இருப்பது கனவு நினைவான மாதிரி உள்ளது. அனிருத் மற்றும் விஜய் சேதுபதிக்கு எனது பாராட்டுக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.