‘பாலு மகேந்திராவின் ஆன்மாவைக் கூட மன்னிக்கமாட்டேன்’ என மௌனிகா கூறியிருப்பதுதான், திரையுலகில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இந்திய சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் பாலுமகேந்திரா. தமிழ் ஈழத்தில் பிறந்த அவர் புனே பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் பயின்றவர். அதன் பிறகு சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அவரது கேமரா சாதாரணமானவர்களைக்கூட பேரழகிகளாக காட்டும் என்று பலரும் புகழ்வார்கள். ஒளிப்பதிவாளராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலித்தவர் பாலுமகேந்திரா.

கன்னடத்தில் அவர் கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தில் கமல் ஹாசன் கதாநாயகனாக நடித்தார்.அதன் பிறகு தமிழில் அழியாத கோலங்கள் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து அவர் இயக்கிய மூடுபனி, வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, மறுபடியும், சதிலீலாவதி, அது ஒரு கனாக்காலம், தலைமுறைகள் என ஒவ்வொரு படமும் செல்லுலாய்டு சிற்பங்களாக இன்றுவரை ஜொலிப்பவை.

பாலுமகேந்திரா தனது உதவி இயக்குநர்கள் குறித்து இப்படி கூறுவார். ‘எனது வித்துக்கள் எல்லாம் வீரியமானவை‘ ஆம் அவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாலா, வெற்றிமாறன், ராம், சீனு ராமசாமி, விக்ரம் சுகுமாறன், நா. முத்துக்குமார் என ஒவ்வொருவரும் தனித்துவமிக்கவர்கள்.

பாலு மகேந்திரா எந்த அளவுக்கு கொண்டாடப்படுகிறாரோ அந்த அளவுக்கு அவரை சுற்றி விமர்சனங்களும் வைக்கப்பட்டன. அகிலா என்பவரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஷங்கி என்ற மகன் இருக்கிறார். இந்தச் சூழலில் நடிகை ஷோபாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திடீரென ஷோபா தற்கொலை செய்துகொண்டார். அது தற்கொலை இல்லை கொலை என பலர் கூறுவதுண்டு. அதேபோல், நடிகை மௌனிகாவை காதலித்த அவர் பத்து வருடங்களுக்கும் மேல் ஒன்றாக வாழ்ந்தார்.

இந்த சூழ்நிலையில்தான் பாலுமகேந்திரா உயிரிழந்தார். அப்போது அவரது உடலை பார்க்க மௌனிகா வந்தார். ஆனால் அவரை உள்ளே விடக்கூடாது என இயக்குநர் பாலா கடுமையாக பிரச்னை செய்தார். இதனையடுத்து பாரதிராஜா உள்ளிட்டோர் சமாதானப்படுத்தி பாலுமகேந்திராவின் உடலை மௌனிகா பார்ப்பதற்கு உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மௌனிகா அளித்த பேட்டி ஒன்றில் அவர் பேசுகையில், ‘என்னை பிரியும்போது தன்னுடைய வயோதிக சுமையை உன்னிடம் (மௌனிகாவிடம்) திணிக்க விரும்பவில்லை என பாலுமகேந்திரா கடிதம் எழுதினார். ஆனால் வயோதிகம் என்பதெல்லாம் காரணமாக இருக்காது. அவரை யாராவது ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் இருந்ததால் பிரிந்திருப்பார். அவர் அப்படி செய்தது பெரிய தவறு. என்னால் அவரை மன்னிக்கவே முடியாது. அவரது ஆன்மாவைக்கூட மன்னிக்க முடியாது. எந்த காரணத்தையும் சொல்லாமல் போய்விட்டார் என்ற கவலை இப்போதும் இருக்கிறது’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal