ரஜினியின் ‘எஜமானாக’ நடத்த சரத்பாபுவின் உயிரை இன்று பறித்திருக்கிறது எமன்..!

நடிகர் ரஜினிகாந்த் உடன் அண்ணாமலை, முத்து, முள்ளும் மலரும் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ள நடிகர் சரத்பாபு – சூப்பர்ஸ்டார் இடையேயான நட்பை பற்றி பார்க்கலாம்.

ஆந்திராவில் பிறந்தவர் சரத்பாபு. இவரது இயற்பெயர் சத்யம் பாபு. தெலுங்கு படங்களில் நடித்து வந்த சரத்பாபுவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் என்றால் அது கே.பாலச்சந்தர் இயக்கிய பட்டினத்தில் பிரவேசம் தான். இப்படத்தின் போது தான் பாலச்சந்தர் சத்யம் பாபுவுக்கு சரத் பாபு என பெயரிட்டார். அந்த பெயர் தான் தற்போது அவருக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை பெற்று தந்துள்ளது.

நடிகர் சரத்பாபு – ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றி உள்ளனர். இவர்கள் சேர்ந்தாலே அந்த படம் ஹிட் என சொல்லும் அளவுக்கு சக்சஸ்புல் நடிகர்களாக இருவரும் வலம் வந்தனர். ரஜினியும் சரத் பாபுவும் முதன்முதலாக இணைந்த திரைப்படம் முள்ளும் மலரும். மகேந்திரன் இயக்கத்தில் கடந்த 1978-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் சரத்பாபுவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அப்படத்தில் இடம்பெறும் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்கிற பாடலை அனுபவித்து பாடியபடி இவர் ஜீப் ஓட்டி வரும் காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இதையடுத்து ரஜினியுடன் நெற்றிக்கண், வேலைக்காரன் போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த சரத்பாபு, கடந்த 1992-ம் ஆண்டு வெளியான அண்ணாமலை படத்தில் ரஜினிக்கு நெருங்கிய நண்பனாக நடித்து, பின்னர் வில்லனாக மாறி மிரட்டி இருப்பார்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை படத்தில் ரஜினி – சரத்பாபு இடையே நடக்கும் வார்த்தை மோதலை செம்ம மாஸாக காட்சி படுத்தி இருப்பார்கள். அந்த காட்சியை இன்று பார்த்தால் கூட புல்லரிக்கும். அந்தளவுக்கு இருவரும் போட்டிபோட்டு நடித்திருப்பார்கள். அண்ணாமலை படம் வெற்றியடைந்ததற்கு ரஜினி – சரத்பாபு காம்போவின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதும் ஒரு காரணம்.

அண்ணாமலை திரைப்படத்துக்கு முன்னர் வரை ரஜினியை படத்தில் யாராவது அடித்தாலோ, அவருடன் சண்டை போட்டாலோ, சம்மந்தப்பட்ட வில்லன் நடிகரின் வீட்டின் முன் ரஜினி ரசிகர்கள் குவிந்து ரகளை செய்த சம்பவங்களும் அரங்கேறின. ஆனால் அத்தகைய பிரச்சனையெல்லாம் எதிர்கொள்ளாத ஒரே நடிகர் சரத்பாபு தானாம். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அண்ணாமலைக்கு அடுத்தபடியாக முத்து படத்தில் ரஜினியின் எஜமானாக நடித்திருந்தார் சரத்பாபு. அந்த கேரக்டருக்கு இவரை விட யாரும் கச்சிதமாக பொருந்தி இருக்க மாட்டார்கள் என சொல்லும் அளவுக்கு நடித்திருப்பார் சரத்பாபு. அப்படத்திலும் எஜமான்… எஜமான் என தன் காலையே சுற்றி வரும் ரஜினியுடன் சேர்ந்து சரத்பாபு செய்த காமெடி அலப்பறைகள் மக்களால் பெரியளவில் ரசிக்கப்பட்டன. அப்படமும் இவர்கள் இருவரது கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

முத்து படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினியின் நட்புக்காகவே சரத்பாபு அவர் தயாரித்த பாபா படத்தில் ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்துள்ளார். ரஜினிக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் சரத்பாபுவும் ஒருவர். இவர்கள் இருவரும் சினிமாவை போல் ரியல் லைஃபிலும் நெருங்கிய நட்புடன் பழகி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal