சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் அறிமுகமான சித்தி இத்னானி தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்துள்ள நிலையில், சற்று முன் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர்.
பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்த அதா சர்மா தான் தி கேரளா ஸ்டோரி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அவரது தோழி கீதாஞ்சலி எனும் கதாப்பாத்திரத்தில் தி கேரளா ஸ்டோரி படத்தில் சித்தி இத்னானி நடித்துள்ள நிலையில், நெட்டிசன்கள் அவரையும் சேர்த்து திட்டி வருகின்றனர்.
கிராண்ட் ஹால் எனும் குஜராத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்தி இத்னானி. தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர் தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு உருவான வெந்து தணிந்தது காடு படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகமானார். தி கேரளா ஸ்டோரி படத்தில் கீதாஞ்சலி எனும் கதாபாத்திரத்தில் சித்தி இத்னானி நடித்துள்ள நிலையில், கடும் எதிர்ப்புகள் கிளம்பவே திடீரென எந்த மதத்துக்கும் தான் எதிரானவள் அல்ல என்றும் தி கேரளா ஸ்டோரி படமும் எந்த மதத்தையும் எதிர்க்கவில்லை என போஸ்ட் போட்டுள்ளார்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெறுப்பை உமிழும் படம் இல்லை என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டும் தான் நோக்கம் என்றும் இந்த படம் எந்த மதத்தையும் எதிர்க்கவில்லை என்றும் தீவிரவாதத்தை தான் எதிர்க்கிறது என்றும் நடிகையாக எனது கடமையை நான் சரியாக செய்துள்ளேன் என நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
படத்தில் நடித்து விட்டு பேச்சைப் பாரு இனிமேல் கோலிவுட் மற்றும் கேரளாவில் ஒரு படத்தில் கூட நீ நடிக்க முடியாது, அப்படி நடித்தாலும் அந்த படத்தை பார்க்க மாட்டோம் என தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் சித்தி இத்னனையை வெளுத்து வாங்கி வருகின்றனர். த்தூ.. பணத்துக்காக இப்படியொரு கேடுகெட்ட படத்தில் நடிக்கலாமா? மதவெறியை மட்டுமே இந்த படம் தூண்டுகிறது. உங்களுக்கு எல்லாம் முஸ்லீம் நண்பர்களே இல்லையா? என்றும் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து தமிழில் ஆர்யாவின் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் சித்தி இத்னானி ஹரிஷ் கல்யாண் உடன் நூறு கோடி வானவில் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தமிழ்நாட்டில் சித்தி இத்னானிக்கு கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு மிகப்பெரிய பிரச்சனையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.