மே 7ந்தேதி நடக்கும் நீட் தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றால் கடந்த 2 வருடமாக நீட் தேர்வு காலதாமதமாக நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கையும் தாமதமாக நடந்தது.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான தேதியை 2 மாதத்திற்கு முன்பே தேசிய தேர்வு முகமை அறிவித்தது. மே மாதம் 7-ந்தேதி நடைபெறுவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் நீட் பயிற்சி வகுப்பில் சென்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
தற்போது சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ, -மாணவிகளுக்கு வருகிற 13-ந்தேதி தேர்வு தொடங்குகிறது. தேர்வு எழுதி வரும் மாணவர்கள் நீட் தேர்வுக்கும் தங்களை தயார்படுத்தி கொள்கின்றனர். பள்ளியிலும் அதற்கான சிறப்பு வகுப்புகளுக்கும் சென்று பயிற்சி எடுத்து வரும் நிலையில் நீட் தேர்வுக்கு இன்று (6-ந்தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய முகமை தெரிவித்துள்ளது.
neetnta.nic.in என்ற இணையதளத்தின் வழியாக பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதற்கான விண்ணப்ப படிவத்தினை நேரடி லிங் மூலம் பதிவு செய்யலாம். மாணவ-மாணவிகள் முக்கியமான ஆவணங்களை இணைத்து பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீட் தேர்வு தொடர்பாக தகவல் கையேடும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.