தமிழ்நாட்டில் வழக்கறிஞராக வேண்டும் என்று ஆண்கள் விரும்புவதை விட பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதிலும் இப்பொது ஆண்களுக்கு ஈடாக பெண்களும் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் மூன்றாம் பாலினமான திருநங்கை கண்மணி தன் படிப்பை முடித்து ஒரு வழக்கறினராக வெற்றிபெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாது தான் ஒரு நீதிபதி ஆகா வேண்டும் என்பதே அவரது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர் என அழைக்கப்படும் திருநங்கை, திருநம்பிகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசு அளித்து வருகிறது. அவர்களுக்கென்று தனி நல வாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இருப்பினும், குடும்பத்தினரால் ஒதுக்கப்படுவதால் திருநங்கைகள் பலர் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் சூழல் இன்றும் நிலவி வருகிறது.

ஒருசிலர் மட்டும் கல்லூரி படிப்பை முடித்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து வந்த திருநங்கை கண்மணி என்பவர் தற்போது படிப்பை முடித்துள்ளார். அவர், சட்டக் கல்லூரியில் படித்து முடித்த முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருக்கு, வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வழங்கினார்.

சென்னை உயர் நீதிமன்ற வளக்கத்தில் உள்ள பார் கவுன்சில் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் கௌரி ரமேஷ் கலந்து கொண்டு திருநங்கை கண்மணிக்கு பாராட்டு தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலர் தலைவர் அமல்ராஜ் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சட்டம் படித்து வழக்கறிஞராக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பிற மாநிலங்களில் படித்து தமிழ்நாடு கவுன்சிலில் பதிவு செய்ய வரும் வழக்கறிஞர்களின் ஆவணங்கள் முறையாக ஆராய்ந்து பிறகே, பதிவு செய்யப்பட்டு வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 75 நீதிபதிகளின் பதவி இடங்களில் உள்ள 19 காலியிடங்களை கொலீஜிய பரிந்துரைகளை ஏற்று, சமூக நீதியை கடைப்பிடித்து, தாமதம் இல்லாமல் நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற மன்றத்தின் தென் மண்டல அமர்வை அமைக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வரும் கோரிக்கையில், பார் கவுன்சிலும் துணை நிற்கும் என அமல்ராஜ் தெரிவித்தார்.

மேலும் திருநங்கை கண்மணி தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞராக பதிவு செய்த முதல் திருநங்கை என்ற பெருமை கண்மணிக்கு கிடைத்துள்ளது. குடும்பத்தினர் ஏற்க மறுத்தாலும் பள்ளி மற்றும் கல்லூரியில் சக மாணவர்களும், ஆசிரியர்களும், பேராசிரியர்களும் கல்வி கற்க தனக்கு துணை புரிந்ததாக கண்மணி பெருமையுடன் கூறி உள்ளார்.

வழக்கறிஞர் ஆனதுடன் நிறுத்தி விடாமல் சிவில் நீதிபதிக்கான தேர்வில் பங்கேற்று வெற்றி அடைய வேண்டும் என்பதே இலக்கு என்றும் இதற்காக வேளச்சேரியில் உள்ள சந்துரு லா அகாடமியில் பயிற்சி பெற்று வருவதாகவும் திருநங்கை கண்மணி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

By Divya