நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொத்தம் 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 2-ம் தேதி வரையிலும் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்று சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbse.gov.in, cbseresults.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.

இந்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் நாடு முழுவதும் மொத்த தேர்ச்சி விகிதம் 87.98% ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம். கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 87.33 சதவீதமாகவே இருந்தது.

அதேபோல், இந்த ஆண்டு 91.52% மாணவிகளும், 85.12% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, மாணவர்களைவிட மாணவிகள் 6.40% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 24,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர், மேலும் ஒரு லட்சத்து 16 ஆயிரம் மாணவர்கள் 90 சதவீதம் மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

மண்டல வாரியாக தேர்ச்சி விகிதம்: மண்டல வாரியான தேர்ச்சியைப் பொறுத்தவரையில் திருவனந்தபுரம் 99.91% உடன் முதலிடத்திலும் பிரயாக்ராஜ் 78.35% தேர்ச்சி விகிதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளன.

  • திருவனந்தபுரம் மண்டலம்: 99.91%
  • விஜயவாடா 99.04%
  • சென்னை 98.47%
  • பெங்களூரு – 96.95%
  • மேற்கு டெல்லி – 95.64%
  • கிழக்கு டெல்லி – 94.51%
  • சண்டிகர் – 91.06%
  • பஞ்ச்குலா – 90.26%
  • புனே – 89.78%
  • அஜ்மீர் – 89.53%

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே.20-க்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal