ஐந்து மாநிலங்களில் ராஷ்மிகா மந்தனாவுக்கு சொகுசு பங்களா இருப்பது தொடர்பான வதந்திக்கு, தற்போது மௌனம் கலைத்திருக்கிறார் ராஷ்மிகா..!

கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் கடந்த 2016ஆம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதனையடுத்து தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிந்தம் படம் மூலம் பலரது ரசனையையும் கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட ராஷ்மிகா தற்போது பல மொழிகளில் நடித்துவருகிறார்.

கன்னடம், தெலுங்கு என ரவுண்டு கட்டி அடித்த ராஷ்மிகா எப்போது தமிழில் அறிமுகமாவார் என ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்தனர். கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார் ராஷ்மிகா. இருப்பினும் அந்தப் படம் ராஷ்மிகா சொல்லிக்கொள்ளும்படியான அறிமுகமாக இல்லை.

அடுத்து, வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படமும் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் ராஷ்மிகா விஜய்க்கு பக்கா ஜோடியாக இருக்கிறார் என பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே ஹிந்தியிலும் குட் பை, மிஷன் மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இப்படி பல மொழிகளில் நடித்துவரும் ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் மீம் ஒன்று பரவிவருகிறது. அந்த மீமில், 5 வருட சினிமா வாழ்க்கையில் ராஷ்மிகா மந்தனாவுக்கு ஹைதராபாத், கோவா, கூர்க், மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களில் சொகுசு பங்களாக்கள் இருக்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மீம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனதை அடுத்து அந்த மீம் பேஜுக்கு சென்று பதிலளித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, “இது உண்மையாக இருக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal