தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில் பிரசித்தி பெற்ற கேரளா திருவைராணி குளம் மகாதேவர் கோவிலில் அமலா பால் மாற்று மதத்தவர் என்பதால் அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து விட்டது. இது தொடர்பாக அவர் கோவில் வருகை பதிவேட்டில் தனது கருத்துக்களை பதிவிட்டார். அதில் திருவைராணி குளம் மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆர்வத்துடன் வந்தேன்.

ஆனால் சாமியை அருகில் சென்று தரிசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இதனால் நான் கோவிலுக்கு வெளியே நின்றே சாமியை தரிசிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த 2023-ம் ஆண்டிலும் மதபாகுபாடு காட்டப்படுவது வருத்தமாக இருக்கிறது. இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்புகிறேன். மக்களை மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மனிதர்களாக மதிக்கும் காலம் வரும், என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகை அமலா பால் தற்போது தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி மலை முருகன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிடுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal