வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் முதல் நாளில் வசூலை வாரிக்குவித்த நிலையில், இரண்டாம் நாள் வசூல் கடும் சரிவை சந்தித்துள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன வாரிசு திரைப்படம் ரசிகர்களைக் கவரும் வகையில் கமர்ஷியல் அம்சங்களுடன் அமைந்திருந்ததால், இப்படம் முதல் நாளில் வசூலை வாரிக் குவித்தது. அதன்படி இப்படம் உலகளவில் ரூ.26.5 கோடி வசூலித்து இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.17 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது. இதுதவிர கேரளா மற்றும் கர்நாடகாவிலும் வாரிசு வசூலை வாரிக்குவித்து இருந்தது.
விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு முதல் நாள் வசூல் அதிகளவில் வருவது வழக்கம் தான். ஆனால் இரண்டாம் நாளில் இருந்து தான் அப்படத்தின் உண்மை முகம் தெரியவரும். அந்த வகையில் இரண்டாம் நாளில் வாரிசு படத்தின் வசூல் கடும் சரிவை சந்தித்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.17 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சரிவுக்கு முக்கிய காரணம் நேற்று விடுமுறை நாள் இல்லை என்பது தான். இதனால் தான் வசூல் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப ரசிகர்கள் வரத்தொடங்கினால் தான் இப்படத்தின் வசூல் மீண்டும் ஏறுமுகத்துக்கு செல்லும் என கூறப்படுகிறது. இனி பொங்கல் விடுமுறை வருவதால், அதில் வாரிசு படத்துக்கு அதிகளவில் குடும்ப ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.