மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட காசிமேடு பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ ஜே.ஜே.எபினேசர் ஆகியோர் உடன் சென்றனர். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் சென்ற கான்வாயில் சென்னை மேயர் பிரியா, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, எம்எல்ஆர் ஆகியோர் ஃபுட்போர்டு அடித்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. மேலும், சர்ச்சையானது.


அதுகுறித்து மேயர் பிரியா அளித்த விளக்கத்தில் :

காசிமேட்டில் மழையால் பாதிக்கப்பட்ட 2 இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஒரு இடத்தில் ஆய்வு செய்தபோது நாங்கள் இருந்தோம். அடுத்த இடத்தில் ஆய்வு செய்யும் முன் அவருக்கு முன்பாக அந்த இடத்திற்கு நாங்கள் சென்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆனால், இரண்டு இடங்களுக்கும் இடையே தொலைவு அதிகமாக இருந்தது. தொடர்ந்து நான் நடந்து சென்று கொண்டிருந்தபோது கான்வாய் வந்துகொண்டிருந்தது. சரி, அதில் ஏறி செல்லலாம் என்று நினைந்து ஏறினேன். ஆனால், அது சர்ச்சையாகிவிட்டது” என இவ்வாறு மேயர் பிரியா கூறினார்.


அமைச்சர் சேகர் பாபு அளித்த விளக்கத்தில் :

மழை பாதிப்புகளை பார்வையிட சென்ற போது முதல்வரின் கான்வாயில் மேயர் பிரியா தொங்கிக்கொண்டு சென்றது அதிகார துஷ்பிரயோகம் அல்ல. அதை அவரது துணிச்சலாகதான் பார்க்க வேண்டும். அவர் துணிச்சலோடுதான் முதல்வரின் கான்வாயில் ஏறினார் என்றார்.

இந்த நிலையில், சட்டத்துக்கு புறம்பாக பொது இடத்தில் புட்போர்டு அடித்ததாகக்கூறி மேயர் பிரியா, ககன்தீப் சிங் பேடி, எம்எல்ஏ எபினேசர் ஆகியோர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் செல்வகுமார் என்பவர் புகார் கொடுத்துள்ளார். அவர் அந்த புகாரில், பொதுமக்கள் இதுபோன்று வாகனத்தில் தொங்கியபடி சென்றால் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதேபோல, அரசு பொறுப்பில் உள்ளவர்கள் இவ்வாறு புட்போர்டு அடிப்பது ஏற்றுக்கொள்ளப்படாது. அது சட்டத்துக்கு புறம்பானது. எனவே, மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 93 இன் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆன்லைன் வாயிலாக கொடுக்கப்பட்டுள்ள இந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் புகார் தாரரிடம் இருந்து வீடியோ ஆதாரங்கள் பெற்றுக்கொள்ளப்படும். அதனை ஆராய்ந்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது காவல்துறை சார்பில் இதற்கு வேறேதேனும் விளக்கம் அளிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

By Divya