டிஜிட்டல் தளத்தை பார்வையிடும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த தருணத்தில்.., கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது அதிக அளவிலான உள்ளடக்கத்தை ரசிகர்கள் பார்வையிடுகிறார்கள். வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று புதிய படைப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும், காத்திருப்பும் ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது பழக்கமாகவும் மாறிவிட்டது. இருப்பினும் எஸ் ஜே சூர்யாவின் ரசிகர்கள், ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’எனும் வலைதளத் தொடரைக் காண்பதற்கு பேரார்வம் கொண்டிருந்தனர். அமேசான் ப்ரைம் வீடியோவில் அசல் தமிழ் தொடரான ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ டிசம்பர் 2 ஆம் தேதியன்று வெளியானது. ஏராளமான ரசிகர்கள் விடியற்காலை வரை காத்திருந்து எஸ் ஜே சூர்யாவை டிஜிட்டல் தளத்தில் கண்டு ரசித்தனர். வதந்திகள், பொய்கள் மற்றும் வஞ்சகத்தின் வலையில் சிக்கி இருந்தாலும், உண்மையை வெளிக் கொண்டு வரும் வரை மனம் திரும்ப மறுக்கும் ஒரு சிக்கலான ஆனால் உறுதியான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் எஸ் ஜே சூர்யாவிற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களும் அவரது தனித்துவமான நடிப்பைப் பாராட்டுகிறார்கள்.


எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், இந்த தொடரில் எஸ்.ஜே சூர்யாவிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிகொனந்துள்ளார். அவரது சிறந்த நடிப்பிற்கான பட்டியலில் இந்த தொடரும் இடம்பெறும். கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி, எட்டு அத்தியாயங்களை கொண்டதாக இருந்தாலும், ரசிகர்கள் இந்த தொடரை முழுமையாக கண்டு ரசித்து, தங்களது விமர்சனங்களையும், எண்ணங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட சில விமர்சங்கள்

சில்வர் ஆரிப் எனும் ரசிகரின் பதிவு… ” ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளியான வதந்தி எங்களை ஏமாற்றவில்லை. தரமான படைப்பாக இருந்தது. இந்திய சினிமாவின் மிகப் பெரும் படைப்பாக உருவாகி இருக்கிறது. எஸ் ஜே சூர்யா, எங்களை சிறந்த நடிப்பின் மூலம் வியக்க வைத்திருக்கிறார். என்றாவது ஒரு நாள் பள்ளி பாடப் புத்தகத்தில் எஸ் ஜே சூர்யாவின் தனித்துவமான நடிப்பு குறித்த ஒரு அத்தியாயம் இடம்பெறும் என நம்புகிறேன்.”

ரிச்சர்ட் மகேஷ் என்பவரின் பதிவில், ” எஸ். ஜே. சூர்யாவின் கம்பீரமான நடிப்பில் வெளியாகி இருக்கும் மற்றொரு படைப்பு. எந்த இடங்களிலும் குறை கூற முடியாத அளவிற்கு அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஒரு திகில் கதையை நேர்த்தியாக எழுதி இயக்கியுள்ளார். வெலோனியாக நடித்திருக்கும் நடிகை சஞ்சனா, முழு தொடரின் ஆன்மாவாக பரவி, ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். இதனை உருவாக்கிய புஷ்கர் -காயத்ரிக்கும் பாராட்டுகள்..!” என பதிவிட்டிருக்கிறார்.

நித்யா எனும் ரசிகையின் பதிவில்,” வதந்தி இதயத்தை கனமாக்கிய தொடர்..! எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு உங்களை உணர்வுபூர்வமாக தொடருடன் இணைக்கும். என்னை பொருத்தவரை எத்தனை காட்சிகளில் கண்ணீர் வந்தது என்று தெரியவில்லை. ஒவ்வொரு கட்சியிலும் எஸ். ஜே. சூர்யாவின் சிறப்பான நடிப்பை காணலாம். இயக்குநரால் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட தொடர். அவருக்கும் நன்றி” என பகிர்ந்திருக்கிறார்.

யூமரி பாலன் எனும் ரசிகரின் பதிவில், ” என்ன ஒரு தொடர்..! இந்த தொடரில் பங்களிப்பு செய்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அதிலும் குறிப்பாக தலைவர் எஸ் ஜே சூர்யா சார், மது அருந்தும் காட்சியும், வசனமும் எனக்கு இறைவி திரைப்படத்தின் உச்சகட்ட காட்சியை நினைவு படுத்தியது. அருமை.. தொடர் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்..” என குறிப்பிட்டிருக்கிறார்.

வி வேலன் என்பவரின் பதிவில், ” வதந்தி- எஸ் ஜே சூர்யா நடிப்பில் வேட்டையாடியிருக்கும் தொடர். ஒளிப்பதிவாளர், பின்னணி இசை, கதை, நடிப்பு அனைத்தும் பிரமாதம். இதன் மூலம் எஸ் ஜே சூர்யாவால் நடிக்க முடியாத வேடம் ஏதும் உண்டா? என்ற அளவிற்கு அவர் நடித்திருக்கிறார். அத்துடன் இதைக் கடந்து அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் ? எஸ் ஜே சூர்யா ஒரு நேச்சுரல் ஸ்டார் என்பதை நிரூபித்திருக்கிறார்.” என பகிர்ந்திருக்கிறார்.

‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’எனும் வலைதளத் தொடரில், எஸ். ஜே. சூர்யாவின் அபாரமான நடிப்பு திறமைக்காக ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். ரசிகர்களின் அன்பு மழையிலும், பாராட்டிலும் எஸ் ஜே சூர்யா மூழ்கி விட்டார். இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக ஆளுமை இருந்தாலும், பல திறமையான படைப்புகளை வழங்கி இருந்தாலும், நடிகராக வேண்டும் என்ற அவரது அசலான ஆசை, இந்த தொடரில் நிறைவேறி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அவரை மலை அளவுக்கு புகழ்ந்து பேசும் நிலை உருவாகி, தொடர்கிறது.

By Porkodi