வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ஜீவன், கதாநாயகிகளாக மல்லிகா ஷெராவத், சாய் ப்ரியா, ரித்திகா சென் மற்றும் சுமன், சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இனியன் ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் ஆர்யா டிரைலரை வெளியிட்டார்.
விழாவில் இசையமைப்பாளர் அம்ரிஷ் பேசியபோது,
“இந்தப் படத்தில் பெரிய அனிமேஷன் பாம்பு வருகிறது. பாம்பு வரும் காட்சிக்கான பின்னணி இசையை அமைத்தபோது அந்த சத்தத்தை கேட்டுவிட்டு என ஸ்டுடியோவுக்குள் நிஜமான பாம்பே வந்துவிட்டது. இந்த படத்தின் இயக்குனர் வடிவுடையானுடன் ‘பொட்டு’ படத்திலிருந்து தொடர்பு ஏற்பட்டது. இந்தப் படத்தை மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறார். நடிகர் ஜீவன் அடுத்த கட்டத்துக்கு போகிற மாதிரியான நடிப்பை கொடுத்திருக்கிறார். எனக்கு இசையமைக்கும் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் சரவணன் பேசியபோது
“ ‘பாம்பாட்டம்’ படம் பார்த்துட்டு நான் மிரண்டுவிட்டேன். பெரிய டைரக்டர் ஆகவேண்டும் என்ற வடிவுடயானின் கனவு, இந்தப்படத்தில் நனவாகும். பான் இந்தியா படமான இதில் நானும் ஒருவனாக நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”என்றார்.
இயக்குனர் ஏ.வெங்கடேஷ் பேசியபோது, “இந்தப்படத்தின் டிரைலரும் பின்னணி இசையும் நல்லா வந்திருக்கு. பழனிவேல் சார் தயாரிப்பில் அடுத்ததாக நான், ‘ரஜினி’ என்ற படத்தை இயக்கி வருகிறேன். பாம்பை வைத்து எடுத்தப் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அந்த வரிசையில் இந்தப்படம் பெரிய வெற்றி அடையும்”என்றார்.
படத்தின் நாயகன் ஜீவன் பேசியபோது,
“படம் வருவதற்கு முன்பே டிரைலர் பேசப்படுகிறது. இந்த கதை புதிய கோணத்தில் இருக்கும். இது நான் நடிக்கும் முதல் பீரியட் படம். இயக்குனர் வடிவுடையானின் உருவத்துக்கும் அவருடைய நடவடிக்கைக்கும் சம்பந்தமே இருக்காது. ’பாம்பாட்டம்’ யாராலும் தீர்மானிக்கமுடியாத படமாக வெளிவரும்”என்றார்.
தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன் பேசியதாவது :-
இந்தப்படத்தின் தயாரிப்பாளர் பழனிவேல் முன்பின் தெரியாதவர்களுக்குகூட உதவி செய்யும் நல்ல மனசுக்காரர். ”தர்மம் தலை காக்கும்..” என்று புரட்சி தலைவர் பாடியதை போல மனிதன் செய்யும் பாவ அழுக்குகள் போக வேண்டுமென்றால் தர்மம் செய்யவேண்டும். ‘பாம்பாட்டம்’ படத்தை அற்புதமாக எடுத்திருக்கிறார்கள். இயக்குனர் வடிவுடையான் பெரிய அறிவுடையான்; மிகச்சிறந்த ஆற்றல் உடையான்; அந்த வடிவுடை அம்மனின் அருள் உடையான். இப்படிப்பட்ட படங்களை இறைவன் அருள் இல்லாமல் எடுக்க முடியாது.
இயக்குனர்கள்தான் நடிகர்களை உருவாக்குகிறார்கள். இன்றைக்கு பலகோடி சம்பளம் வாங்கும் நடிகர்களை; களிமன்னாக இருந்தவர்களை செதுக்கி நடிகனாக உருவாக்கியது இயக்குனர்கள்தான். நடிகர், நடிகைகள் படத்தின் புரமோஷனுக்கு வரவேண்டும். 50 கோடி, 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களால் சினிமா நல்லா இருக்கும் என்று அர்த்தம் இல்லை. தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபம் கிடைத்தால்தான் சினிமா நல்லா இருக்கும்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் குடியால் லட்சக்கணக்கான குடும்பங்கள் கெட்டு குட்டிச்சுவராய் போய்விட்டது. நான் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். குடலையும் குடும்பத்தையும் கெடுக்கும் மது வேண்டாம். அரசாங்கத்திற்கு வேறு வகையில் வருவாய் ஈட்டிக்கொள்ளுங்கள். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அம்ரிஷ் திறமைசாலி எதிர்காலத்தில் நம்பர் ஒன் இசையமைப்பாளராக உயர்வார்.”
இயக்குனர் வி.சி.வடிவுடையான் பேசியபோது,
“ஒரு தரமான படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு எனது நன்றி. இந்த படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறோம். நான் கடுமையாக உழைப்பதாக சொல்கிறார்கள். ஒரு இயக்குனர் கடினமாக உழைத்துதான் ஆகவேண்டும். நான் எப்போதும் தயாரிப்பாளர் பக்கம்தான் நிற்பேன். தயாரிப்பாளருடன் இணைந்து நிற்கும்போதுதான் அவருடைய பிரச்சனைகள் தெரியும். இந்தப் படத்தின் கதைக்காக மூன்று வருடங்கள் உழைத்தேன். பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த பெரிய படமாக ‘பாம்பாட்டம்’ இருக்கும். அடுத்து என்ன என்று யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை சுவாரஷ்யமாக இருக்கும்” என்றார்.
நிகழ்ச்சியில் நடிகைகள் சாய் ப்ரியா, ரித்திகா சென், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். சிறப்பு விருந்தினர்களுக்கு தயாரிப்பாளர் பழனிவேல், பொன்னாடை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியை ஐஸ்வர்யா தொகுத்து வழங்கினார்.