மக்களை தனது நடிப்பு, பேச்சு மற்றும் நகைச்சுவைகளின் மூலமாக கவர்ந்து
இன்றளவும் பல்கலை வித்தகனாக வலம் வரும் நடிகரும், இயக்குநருமான திரு மூர்த்தி என்ற ஆர். பார்த்திபன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

தனக்கென தனித்துவமான, வித்தியாசமான பாணியை சிறு சிறு விஷயங்களில் கூட கையாள்பவர் இயக்குனர் திரு.பார்த்திபன்.

சிறு வயதிலிருந்தே மேடை நாடகங்களில் நடித்தவர். திரைப்படங்களில் மீதுள்ள ஆர்வம் காரணமாக திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுப்பவராக பணியாற்றி கொண்டே வாய்ப்பு தேடிய நிலையில் ராணுவ வீரன், தூரம் அதிகமில்லை, பார்வையின் மறுபக்கம், போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார் பார்த்திபன், இடையில் வாடிக்கை மனிதர்கள் படத்தில் வசனம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அப்போது வாய்ப்பு தேடுவதற்காக இயக்குனர்கள் பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்களின் அலுவலகங்களுக்கு செல்லும் போது இயக்குனர் G.m. Kumar (அப்போது அவர் இயக்குனர் பாக்யராஜிடம் இணை இயக்குநர்)இவருடைய பணிவு, திறமை இவற்றை கண்டு பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்த்து விட்டுள்ளார்.


பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக சேர்ந்த பிறகு “தாவணி கனவுகள்” திரைப்படத்தின் மூலம் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் தபால் காரராக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.முதல் படத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடன் நடிக்கும் பேறு வேறு. அந்த படத்தில் மக்களின் கவனத்தை பெறும் அளவுக்கு இயல்பாக,சிறப்பாக நடித்திருந்தார்.பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பின்னர் முதலில் இயக்கி வெளிவந்த படமாக “புதிய பாதை” திரைப்படம் அமைந்தது.
இவரே கதாநாயகனாகவும் நடித்தார். திரைப்படங்களின் போக்குக்கு ஒரு புதிய பாதையை ஏற்படுத்தும் திரைப்படமாக அந்த திரைப்படம் அமைந்தது. முதல் படத்திலேயே தேசிய விருதும், மாநில அரசு விருதும் பெற்றார்.

தொடர்ந்து பார்த்திபன் இயக்கி நடித்த “,பொண்டாட்டி தேவை” திரைப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் வெளிஇயக்குனர்கள் படங்களில் ஆர் சுந்தர் ராஜன் இயக்கிய “தாலாட்டு பாடவா”, “உன்னை வாழ்த்தி பாடுகிறேன்” எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் “தையல் காரன்,” போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆர் சுந்தர் ராஜன் இயக்கிய தாலாட்டு பாடவா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இசைஞானி இளையராஜா இசையில் அமைந்த பாடல்களும் இன்றளவும் புகழ்பெற்ற பாடல்கள். தொடர்ந்து மீண்டும் தயாரித்து, இயக்கி, நடித்த வித்தியாசமான கதையம்சம் கொண்ட “சுகமான சுமைகள்”திரைப்படம் வரவேற்பை பெறவில்லை என்பதுடன் பொருளாதார ரீதியாக அவருக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தியது.

சிறிது காலம் கழித்து மீண்டும் இயக்கி நடித்த “உள்ளே வெளியே”என்ற ஜனரஞ்சக திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றியை பெற்றார். அடுத்து இயக்கி நடித்த “சரிகபபதநீ” திரைப்படம், இந்த இரண்டு திரைப்படங்களும் எதிர்மறை விமர்சனத்தை பெற்றாலும் பொருளாதார ரீதியாக வெற்றி அடைந்தது. அடுத்து இயக்கி கதாநாயகனாக நடித்த “புள்ளகுட்டிகாரன்,” கதாநாயகனாக நடித்த “டாட்டா பிர்லா,’ போன்ற படங்களில் நடித்து ஒரு நிலையான இடத்தை பிடித்தார். இயக்குனர்சேரன் முதன் முதலில் இயக்கிய “பாரதிகண்ணம்மா”திரைப்படம் இவருடைய நடிப்பில் ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. கீழ் ஜாதி இளைஞர், உயர் ஜாதி பெண்ணை காதலிப்பது போன்ற திரைக்கதை அமைந்த “பொற்காலம் “திரைக்கதை பரபரப்பாக பேசப்பட்டது. வர்த்தக திரைப்படங்களின் போக்கை உடைத்து வித்தியாசமான திரைப்படங்கள் தரவேண்டும் என்ற வேட்கை கொண்ட பார்த்திபன் அன்றைக்கு முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்தாலும் யாரும் ஏற்று நடிக்க தயங்கும் பாத்திரத்தில்” ஹவுஸ் புல்” என்ற திரைப்படத்தில் வயதானவராக நடித்து இயக்கி தேசிய விருதும் பெற்றார்.

பிரிந்த மனைவியை பற்றி பார்த்திபன் ஒரு பேட்டியில் கூறியது:

ஒரு முத்தத்தின் சத்தத்தைக்கூட ஒரு கோடி வார்த்தைகளில் நான் கோர்த்துக் கோர்த்து அழகாக, எதிர்பாராத, மிக வித்தியாசமான அழகான வார்த்தைகளில் அவளை நான் புகழ்வது அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். எதை இழந்தாலும் அவளை இழக்கக் கூடாது என்கிற என் முனைப்பு அவளுக்குச் சிறிய பரிதாபத்தை ஏற்படுத்தியது. நாங்கள் முதன்முதலில் தேனிலவுக்குப் போனது டெல்லிக்கு. இந்தியாவின் உயர்ந்த விருதைக் கொண்டுவந்து அவள் கால்களில் ஒப்படைத்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து அவளுடைய பாதங்களுக்கு ஈரத்தோடு முத்தமிட்டது. அதெல்லாம் அவளைப் பரவசப்படுத்தும் என நினைத்து என்னை நான் பரவசப்படுத்திக்கொண்டேன்.”

தன் மனைவியின் காதலுக்காகவே வாழ்ந்த பார்த்திபன் அதற்கு பிறகு திருமணம் செய்து கொள்ள வில்லை. இணைந்து வாழவில்லை என்றாலும் குழந்தைகளின் நலனுக்காக அவர்களின் இரண்டு மகள்களின் திருமணத்தை இணைந்தே நடத்தினார்கள்.

By Porkodi