ஜெயலலிதா, கலைஞர் ஆளுமைகளாக இருக்கும்போது, புதிய அரசியல் கட்சியை நடிகர்கள் துவக்க தயங்கியபோது, துணிச்சலுடன் கட்சி தொடங்கி, மூன்றாவது பெரிய கட்சியாக தே.மு.தி.க.வை உருவாக்கியவர் விஜயகாந்த்!

தே.தி.மு.க.வினருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நினைத்த நிலையில், அவரது உடல்நிலை அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்காதது தொண்டர்களை வேதனையில் ஆழ்த்தியது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு மேலாக அவர் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து வருகிறார். அமெரிக்கா, சிங்கப்பூர் என பல நாடுகளுக்கு சென்று தலைசிறந்த மருத்துவர்களிடம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் வருத்தமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் அடிக்கடி விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காகவும், சில நேரங்களில் சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.

அந்த வரிசையில் அவர் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காலில் சீரான ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் அவரது காலில் இருந்து மூன்று விரல்கள் அகற்றப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாகவும் அதன் அடிப்படையில் மூன்று விரல்கள் அகற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த தகவல்கள் காட்டுத்தீயாக பரவியது, இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல நடக்கும் பரிசோதனை தான் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் கட்சி சார்பில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தொண்டர்கள் பலர் தேமுதிக கட்சி அலுவலகம் மற்றும் அக்கட்சியின் முன்னணி தலைவர்களுக்கு தொலைபேசி எண் மூலம் அழைத்து கேப்டன் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

விஜயகாந்த் காலில் விரல்கள் அகற்றப்பட்டது உண்மையா அல்லது வதந்தியா என கேள்விகள் எழுந்து வந்தது. இந்நிலையில் தேமுதிக தலைமை கழகம் அது உண்மைதான் என கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘‘நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.

மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து கேப்டனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார், மேலும் கேப்டன் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal