விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆண்டுதோறும் சமூகம், கலை, இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்படும் அந்த வகையில், இந்தாண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த   சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். 

சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க  தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு  “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ” ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். 

2022 ஆம் ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கி வருகிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொகிறோம். முத்தமிழறிஞர் முனைவர் கலைஞர், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள்ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 

அந்தவரிசையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இந்த ஆண்டுக்கான  “அம்பேத்கர் சுடர்”  விருதினை திரைப்படக் கலைஞரும் மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான திரு.பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும்,  பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal