சசிகலாவை ஒற்றைத் தலைமையாக்க ஓ.பி.எஸ். அணி முயற்சி செய்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருப்பதுதான் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

ஒற்றை தலைமை விவகாரத்தில் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்து வருவது எதிர்தரப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.நீதிமன்ற வழக்கு, எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் என அடுத்தடுத்து அஸ்திரங்கள் கைகொடுக்காத நிலையில் இறுதி அஸ்திரமாக ஓபிஎஸ் தரப்பு எடுத்திருப்பது சசிகலாவை தான் என்கிறார்கள்.

எடப்பாடியார் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அதிர்ச்சி ரகமாக இருக்கையில், ஓ.பி.எஸ். எடுக்கப்போவும் முடிவு குறித்து அவரது ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘ ஓ.பி.எஸ். சசிகலாவை மறைமுகமாக ஆதரித்து வருகிறார் என்ற தகவல்கள் சமீபகாலமாக கசிந்து வரும் நிலையில், இது குறித்த பல்வேறு தகவல்கள் நேற்றிலிருந்தே வெளியாகி வரும் நிலையில் இன்று அதனை உறுதிப்படுத்தும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் ஆன்மிக பயணம் மேற்கொண்ட சசிகலாவை பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா சந்தித்து பேசியது அதிமுகவிற்கும் புயல் ஏற்படுத்திய நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டது. இதையடுத்து கட்சி விவகாரங்களில் தலையிடாமல் அமைதி காத்து வந்தார் ராஜா. அதன்பின் சசிகலாவை இருமுறை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் நேற்று ஓபிஎஸ்ஸி-ன் சொந்த ஊரான தேனியில் நடைபெற்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு ராஜா பல்வேறு விஷயங்களை நிர்வாகிகளிடம் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதிமுகவுக்காக உயிரைக் கொடுத்து உழைத்ததற்கான பலனை தற்போது அண்ணன் அனுபவித்து வருவதாகவும், ஜெயலலிதாவுக்கு காட்டியது போல விசுவாசத்தை சசிகலாவுக்கு காட்டி இருந்தால் இன்று அவர் முதலமைச்சராக இருந்து இருப்பார் என்று பேசியிருக்கிறார்.

இது குறித்த தகவல்கள் அவ்வளவாக வெளியாகாத நிலையில் இன்று காலை சென்னை வந்து இருக்கிறார் ஓ.ராஜா. அதன்பிறகு சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய பிறகு இன்று தனது அண்ணன் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்திருக்கிறார். அப்போது சசிகலா கூறிய சில முக்கிய தகவல்களை ஓபிஎஸ்ஸிடம் கூறியிருக்கிறார். இந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்த நிலையில் அதன் பிறகு நேராக சசிகலாவை சந்தித்தித்திருக்கிறார் ஓ.ராஜா!

இந்நிலையில் தான் தேவைப்பட்டால் சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் அவரிடம் வலியுறுத்தியுள்ளனர். ஓபிஎஸ் கூறினால் சசிகலாவுடன் இணைந்து பயணிப்பது தொடர்பாக உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் ஓபிஎஸ்ஸிடம் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ்சிடம் ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ள 250 நிர்வாகிகளும் ‘ஒற்றைத் தலைமையாய் சசிகலா வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது’’ என்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal