‘இந்தியா – அமெரிக்கா இடையிலான நல்லுறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது’’ என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில், சர்வதேச நிதியம், உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளின் மாநாடுகளில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன் டில்லி திரும்பும் முன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘‘ரஷ்யா உடன் இந்தியாவுக்கு பாரம்பரிய நல்லுறவு உள்ளது. ரஷ்ய ராணுவ தளவாடங்களை இந்தியா பல ஆண்டுகளாக இறக்குமதி செய்து வருகிறது.அதேசமயம் ரஷ்யாவை விட்டால் இந்தியாவுக்கு வேறு வாய்ப்பில்லை என்றும் சொல்ல முடியாது. அமெரிக்காவுடன் நல்லுறவு பேணவே இந்தியா விரும்புகிறது.

அந்நாட்டுடனான இந்தியாவின் நல்லுறவு, முன்பு இருந்ததை விட, மிக ஆழமாக, நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் ராணுவம், வெளியுறவு துறை அமைச்சர்கள், இந்தோ – பசிபிக் பிராந்திய மேம்பாடு குறித்து பேசினர். மேலும், இப்பிராந்தியத்தின் பொருளாதார கூட்டுறவுக்கான விதிமுறைகளை உருவாக்குவது குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியிடம் பேச்சு நடத்தினார். இவையெல்லாம், நட்பு நாடான இந்தியாவின் புவிசார் அமைப்பை அமெரிக்கா உணர்ந்து அதற்கு மதிப்பு அளிப்பதை காட்டுகிறது’’ என்று பேசினார்.

அமெரிக்காவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாசை சந்தித்து பேசினார். அப்போது, கொரோனா தாக்கம், ரஷ்யா -& உக்ரைன் போர் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு, முக்கியமாக கடன் நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு நிதியுதவி வழங்கும்படி அவர் வலியுறுத்தி உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal