ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் அறிவித்தார். இதனால் விரைவில் துப்பு கிடைத்து ராமஜெயம் கொலை வழக்கு க்ளைமாக்சை நெருங்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த, 2012ம் ஆண்டு மார்ச், 29ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர், கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார் ராமஜெயம். இவரது கொலை வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் உள்ள பிரபல ரவுடிகள், சந்தேகத்திற்குரிய நபர்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை விசாரித்தும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த 10 ஆண்டு காலமாக கொலையாளிகள் யார் என்று நெருங்கவே முடியவில்லை.

ராமஜெயம் கொலை வழக்கை தற்போது காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. அதில் கடந்த மாதம் விசாரணையை துவங்கிய தனிப்படை பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளனர். இந்நிலையில், ராமஜெயம் கொலை வழக்கானது நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிறப்பு புலனாய்வு குழு தங்கள் தரப்பில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். அவர்களின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வருகிற ஜூன் 10ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி ஜெயக்குமார், ‘‘ராமஜெயம் கொலை வழக்கில் ஏற்கனவே விசாரணை மேற்கொண்ட 6 அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமஜெயம் மனைவி, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ராமஜெயம் சகோதரர் அமைச்சர் நேருவிடம் இரண்டு முறை விசாரனை மேற்கொள்ளப்பட்டது’’ என்றார்.

இதற்கிடையே எஸ்.பி., ஜெயக்குமார் வெளியிட்டிருக்கும் பத்திரிக்கைச் செய்தியில், ‘‘ கடந்த 2012-ஆம் வருடம் மார்ச் மாதம்-29 ஆம் தேதி தொழிலதிபர் ராமஜெயம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி மாநகரம் தில்லைநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சிறப்பு புலனாய்வுக்குழுவில் புலன்விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கு குறித்து கைபேசி தகவலை தீவிர பொதுமக்களிடமிருந்து அவ்வப்போது தகவல்கள், கடிதங்கள் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக பெறப்பட்டு வருகிறது. அவ்வாறு பெறப்பட்ட இக்குழுவானது தீவிர விசாரணை செய்து வருகிறது. எனவே இவ்வழக்கு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.

இவ்வழக்கை தப்பு துலக்க சரியான தகவலை தருபவர்களுக்கு ரூ.50 இலட்சம் பண வெகுமதி வழங்கப்படும்’ என தெரிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது[email protected] என்ற இமெயில் மூலமாகவும், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் 9080616241 என்ற செல்போன் மூலமாகவும் தெரியப்படுத்தலாம். ஆர்.மதன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் 9498120467,7094012599 என்ற வாட்ஸ் அப் எண்களிலும் தகவல் தெரிவிக்கலாம்’’ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal