மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து ஓய்வு எடுப்பதற்காக தனது மனைவியுடன் கொடைக்கானல் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் சென்னை புறப்பட்டார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து கடந்த 29ம் தேதி தமிழ்நாடு முதல்வர் தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க கொடைக்கானல் வந்திருந்தார். 4ம் தேதி வரை அவரது ஓய்வு இருக்கும் என அறிவித்திருந்த நிலையில் இன்று மாலை கொடைக்கானலில் இருந்து தனது குடும்பத்துடன் புறப்பட்டார். வரும் வழியில் திடீரென வாகனத்தை நிறுத்திய தமிழ்நாடு முதல்வர், திமுக கட்சித் தொண்டரிடம் திமுக கரை வேட்டியை பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் ஓய்வுக்காக சென்றிருந்த நேரத்தில் மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை, பல்வேறு பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, போதைப் பொருள் நடமாட்டம் என நாளுக்கு நாள் பிரச்சினை அதிகரித்து வந்த நிலையில், முதல்வர் தனது ஓய்வை 1 நாள் முன்னதாகவே முடித்துக் கொண்டு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.